கடனுக்கு பரோட்டா தராததால் உணவில் மண்ணைப் போட்ட ஆடவர்

கடனுக்கு பரோட்டா தராததால் உணவில் மண்ணைப் போட்ட ஆடவர்

படங்கள்: இந்திய ஊடகம்

07 Oct 2023 - 5:50 pm

1 mins read

கொல்லம்: உணவக உரிமையாளர் கடனுக்கு உணவு தர மறுத்துவிட்டதால், ஆத்திரத்தில் ஆடவர் ஒருவர் அவ்வுணவகத்திலிருந்த உணவுப்பொருள்களில் மண்ணைப் போட்டார்.

இதனையடுத்து, அனந்து என்ற அந்த ஆடவரைக் காவல்துறை கைதுசெய்தது.

இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் நிகழ்ந்தது.

அனந்து குற்றப் பின்னணி கொண்டவர் எனக் கூறப்படுகிறது.

கடந்த புதன்கிழமை அங்குள்ள அக்‌ஷரா உணவகத்திற்குச் சென்ற அனந்து, பத்து பரோட்டாவும் மாட்டிறைச்சிக் குழம்பும் கட்டித் தருமாறு கேட்டார்.

கடைக்காரரும் உணவுப்பொட்டலங்களைக் கட்டியபின், அனந்துவிடம் அதற்கான பணத்தைத் தரும்படி கேட்டார். அப்போது, பின்னர் காசு தரும்படி அனந்து கூறினார். ஆனால், கடைக்காரரோ காசில்லாமல் தர முடியாது எனக் கூறிவிட்டார்.

இதனால் சினமடைந்த அனந்து, கடையில் பரோட்டாவிற்காகப் பிசைந்து வைக்கப்பட்டிருந்த மைதா மாவிலும் மற்ற உணவுப்பொருள்களிலும் மண்ணைக் கொட்டியதாக மாத்ருபூமி செய்தி தெரிவிக்கிறது.

அத்துடன், கடையிலிருந்த பாத்திரங்களை எல்லாம் தூக்கி வீசிய அவர், குழம்பையும் சாலையில் கொட்டினார்.

மேலும், கடைக்காரரை அனந்து இழிவாகப் பேசியதுடன் அவரைத் தாக்கியதாகவும் சொல்லப்பட்டது.

குறிப்புச் சொற்கள்