வாரணாசி: இந்தியாவின் அரசுரிமை, ஒற்றுமை, நேர்மை ஆகியவற்றை கீழறுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட வாட்ஸ்எப் குழுவுடன் தொடர்புடைய ஆடவர் குறித்து உத்திரப் பிரதேச பயங்கரவாத ஒழிப்புப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளார்.
வாரணாசியின் டோஷிப்பூர் நகரைச் சேர்ந்த துஃபாயில் மக்சூட் அலாம், பாகிஸ்தான் ஆதரவுபெற்ற பயங்கரவாத அமைப்புகள் உருவாக்கிய வாட்ஸ்எப் குழுவுடன் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் தொலைபேசி எண்களுடன் முக்கிய உள்நாட்டு பாதுகாப்புத் தொடர்பான விவரங்களையும் ஆடவர் பகிர்ந்துகொண்டதாகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
இது குறித்த தகவல் கிடைத்ததை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் துஃபாயில் பாகிஸ்தானில் உள்ள பலருடன் தொடர்பில் இருப்பதைத் தீவிரவாத ஒழிப்புப் பிரிவு உறுதிபடுத்தியது.
பாகிஸ்தானில் உள்ள தெஹ்ரீக்-எ-லப்பாயிக் பயங்கரவாத அமைப்பின் தலைவர் முலானா ஷாட் ரிஸ்வியின் காணொளிகளை துஃபாயில் வாட்ஸ்எப் குழுக்களில் மற்றவர்களுடன் பகிர்ந்தார்.
பாபர் பள்ளிவாசல் விவகாரத்தில் பழிவாங்க இந்தியாமீது போர் தொடங்க அழைப்பு விடுக்கும் குறுஞ்செய்திகளோடு இந்தியாவில் ஷரியா சட்டத்தை அமல்படுத்தும்படியான தகவல்களையும் துஃபாயில் குறிப்பிட்டார்.
ராஜ்காட், நமோகாட், ஜமா பள்ளிவாசல் போன்ற இந்தியாவின் முக்கிய இடங்களின் படங்களையும் தகவல்களையும் பாகிஸ்தான் எண்களுக்குத் துஃபாயில் அனுப்பினார்.
பாகிஸ்தானால் நடத்தப்படும் குழுக்களுடன் வாரணாசியில் உள்ள மற்ற சிலருக்கும் இணைப்புகள் அனுப்பப்பட்டன.
தொடர்புடைய செய்திகள்
600க்கும் அதிகமான பாகிஸ்தான் எண்களுடன் துஃபாயில் தொடர்பில் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
துஃபாயிலின் கைபேசியும் சிம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டன.