புதுடெல்லி: ஒன்றரைக் கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டு தங்கக் கலசங்களைத் திருடிய ஆடவர், காவல்துறையிடம் சிக்கினார்.
டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி, பத்து நாள்களுக்கு ‘தசலட்சண மகாபர்வ்’ என்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியின்போது, பத்து நாள்களும் வைரக் கற்கள் பதிக்கப்பட்ட, 115 கிராம் எடை கொண்ட தங்கக் கலசமும் 760 கிராம் எடையுள்ள தங்கத் தேங்காயும் வைத்து பூசை செய்யப்படுவது வழக்கம். இவற்றின் மதிப்பு ரூ.1.50 கோடியாகும்.
இந்நிலையில், நிகழ்ச்சியின்போது இரு கலசங்களும் திடீரென மாயமாயின. இதனால் அதிர்ச்சி அடைந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
கண்காணிப்புக் கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஏற்கெனவே பல குற்றச் செயல்களில் ஈடுபட்ட பூஷன் வர்மா என்ற ஆடவர்தான் கலசங்களைத் திருடினார் என்பது உறுதியானது.
இதற்காக அவர் ஜெயின் சமூகத்தினரைப் போல் பாரம்பரிய உடை அணிந்து வந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். இதையடுத்து, அவரைத் தேடிப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
உத்தரப் பிரதேசத்தில் மறைந்திருந்த அவரைக் காவல்துறை தற்போது கைது செய்ததுடன், திருடப்பட்ட இரு கலசங்களையும் அவரிடமிருந்து மீட்டது.

