லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில முதல்வரைக் கொல்லப்போவதாக மிரட்டிய ஆடவர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர், காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியைக் காட்டியதாகக் கூறப்பட்டது.
இன்னொரு காணொளியில் அதே நபர் வீட்டுக் கூரையில் நின்றுகொண்டு காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியைக் காண்பித்தார். மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தைக் கொல்லப்போவதாகவும் அவர் அச்சுறுத்தினார்.
சந்தேக நபர் அவரின் மாமாவுடன் ஏற்பட்ட நிலத் தகராற்றால் அத்தகைய நடவடிக்கையில் இறங்கியதாகப் பின்னர் தெரியவந்தது.
சம்பவம் மதுரா மாவட்டத்தின் நக்லா ஹர்தயால் கிராமத்தில் நடந்தது. கத்துவா என்று அழைக்கப்படும் சுனித் என்பவர் துப்பாக்கியால் மிரட்டிய காணொளி சமூக ஊடகத்தில் பரவியது.
உடனடியாக அவரை அடையாளம் கண்ட காவல்துறையினர், சந்தேக நபரின் வீட்டுக்குச் சென்றனர். வீட்டுக் கூரையின் மேல் ஏறி நின்று சுனித் கூச்சல் போட்டார். இரண்டு மணி நேரத்திற்கும் மேல் துப்பாக்கியைக் காட்டி மிரட்டினார். சில முறை வானில் சுட்டார்.
இரண்டரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறையினர் சுனித்தைக் கைதுசெய்தனர். அவரிடமிருந்து துப்பாக்கி கைப்பற்றப்பட்டது. விசாரணை தொடர்கிறது.

