உறுப்பு தானத்திற்காக ஈரானுக்கு இந்தியர்களைக் கடத்தியவர் கைது

2 mins read
6a16ff82-36de-4558-b210-a248a4810e19
முக்கியக் குற்றவாளியான மது ஜெயகுமார் ஈரானிலிருந்து இந்தியா திரும்பியபோது பிடிபட்டார். - மாதிரிப்படம்: பிக்சாபே

கொச்சி: சட்டவிரோத உறுப்பு தானத்திற்காக ஈரானுக்கு ஆள்களைக் கடத்திய வழக்கில் தொடர்புடைய முக்கியக் குற்றவாளியை இந்தியாவின் தேசியப் புலனாய்வு முகவை (என்ஐஏ) கைதுசெய்துள்ளது.

கேரள மாநிலம், எர்ணாகுளத்தைச் சேர்ந்த மது ஜெயகுமார் என்ற அந்த ஆடவர், தற்போது கொச்சியிலுள்ள என்ஐஏ அலுவலகத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.

இம்மாதம் 8ஆம் தேதி ஈரானிலிருந்து திரும்பிய மது கைதுசெய்யப்பட்டதாக என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன. பின்னர் 12ஆம் தேதி நீதிமன்றத்தில் அவர் முன்னிலைப்படுத்தப்பட்டார். அவரை ஒரு வாரத்திற்கு என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 2024 மே 18ஆம் தேதி கொச்சி விமான நிலையத்தில் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் இளையர் ஒருவரைப் பிடித்து விசாரித்தபோது சட்டவிரோத உறுப்பு தானத்திற்கான ஆட்கடத்தல் வெளிச்சத்திற்கு வந்தது.

அதன் தொடர்பில் எர்ணாகுளம் ஊரகக் காவல் நிலையம் வழக்கு பதிந்தது. பின்னர் அவ்வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டது.

விசாரணையில், பணப் பிரச்சினையில் சிக்கித் தவிப்போரைக் குறிவைத்த சந்தேகப் பேர்வழிகள், சட்டப்படியான உறுப்பு தானம் எனக் கூறி, அவர்களைத் தங்கள் வலையில் விழவைத்தது தெரியவந்தது. உறுப்பு தேவைப்படுவோரையும் அடையாளம் கண்ட அக்கும்பல், ஈரானிய மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை சட்டப்படியானது எனக் கூறி, அவர்களுக்கு அங்கு அத்தகைய அறுவை சிகிச்சையை மேற்கொள்ள ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, மது, சபித், சஜித் ஷியாம், பெல்லம்கொண்டா பிரசாத் என்ற நால்வர்க்கு எதிராக என்ஐஏ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. பின்னர் 2025 பிப்ரவரியில் அனைத்துலகக் காவல்துறை (இன்டர்போல்) மதுவைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது. அப்போது அவர் ஈரானில் தங்கியிருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கில் மதுவின் கைது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அவர் ஈரானில் உறுப்புக் கடத்தல் நடவடிக்கைகளைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும் அங்குள்ள மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்ததாகவும் நம்பப்படுவதாக பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்