டெல்லி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆடவர் கைது

டெல்லி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்த ஆடவர் கைது

படம்: எக்ஸ்/@ஏஎன்ஐ

19 Nov 2026 - 2:55 pm

1 mins read

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்துக்குள் அத்துமீறி நுழைய முயன்ற ஆடவரை மத்தியத் தொழில்துறைப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) தடுத்து நிறுத்தியது.

இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் மூன்றாம் முனையத்திற்குள் அவர் வலுக்கட்டாயமாக நுழைவதைக் காட்டும் 35 நொடிக் காணொளியை அந்தப் படை எக்ஸ் சமூக ஊடகத்தில் வெளியிட்டது.

புதன்கிழமை (நவம்பர் 18) பிற்பகல் 3 மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஹரியானாவைச் சேர்ந்த அந்த ஆடவர் கூடுதல் விசாரணைக்காக டெல்லி காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார்.

உரிய பயண ஆவணங்களின்றிப் புறப்பாட்டு வாயில் வழியே நுழைய முயன்ற அவரைப் பாதுகாப்பு வீரர்கள் தடுத்துநிறுத்திப் பிடித்தனர். எனினும், அவர்களைத் தள்ளிவிட்டு உள்ளே சில மீட்டர் தூரம் அவர் ஓடினார்.

உடனடியாக ஆயுதமேந்திய மற்றொரு வீரரும் விரைவு அதிரடிப் படையினரும் இணைந்து சில நொடிகளில் அவரை மடக்கிப் பிடித்தனர். இதன்மூலம் அனுமதியற்ற நுழைவு தடுக்கப்பட்டு, பாதுகாப்பு விதிமீறல் தவிர்க்கப்பட்டது.

அவரது பையிலிருந்து சில அடையாள அட்டைகளும் கல்விச் சான்றிதழ்களும் மீட்கப்பட்டன.

முறையான பயண ஆவணங்களும் அடையாள அட்டையும் சரிபார்க்கப்பட்ட பிறகே பயணிகளும் ஊழியர்களும் உள்ளே அனுமதிக்கப்படுவர்.

பயங்கரவாத எதிர்ப்புப் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ள இவ்விமான நிலையத்திற்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணிகள் வந்துசெல்கின்றனர்.

குறிப்புச் சொற்கள்