உயிருள்ள பாம்புடன் மருத்துவமனைக்கு வந்த ஆடவர்; அலறியடித்து ஓடிய மருத்துவர்கள்

2 mins read
b1c17dba-6b8b-4550-98cc-6595e21824b7
மதுராவைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநரான தீபக் தன்னைக் கடித்த பாம்பை ‘ஸ்வெட்டர்’ சட்டையின் உள்பைக்குள் கொண்டு வந்திருந்தார். - படம்: இந்தியா டுடே

மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவில் நடந்த ஒரு வினோதமான சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மதுராவைச் சேர்ந்த ரிக்‌ஷா ஓட்டுநரான தீபக் என்பவரைப் பாம்பு ஒன்று கடித்தது.

கடும் வலியிலும் தீபக் நிதானத்தை இழக்கவில்லை. தன்னைத் தீண்டியது எந்த வகைப் பாம்பு என்பது தெரிந்தால்தான் மருத்துவர்களால் துல்லியமான சிகிச்சை அளிக்க முடியும் என அவர் திடமாக நம்பினார்.

அதைத்தொடர்ந்து பாம்பை லாவகமாகப் பிடித்த அவர், அதனை தனது ‘ஸ்வெட்டர்’ சட்டையின் உள்பைக்குள் போட்டுக்கொண்டு மதுரா அரசு மருத்துவமனைக்கு விரைந்தார்.

நேராக அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்ற அவர், அங்கிருந்த மருத்துவரிடம் தனக்கு சிகிச்சை அளிக்குமாறு கோரினார்.

அப்போது, தன்னை எந்தப் பாம்பு கடித்தது என்பதைக் காட்ட, தீபக் தனது சட்டைப் பைக்குள் கைவிட்டு உயிருடன் இருந்த பாம்பை வெளியே எடுத்தார்.

இதைக் கண்ட மருத்துவர் அதிர்ச்சியில் அலறியடித்தபடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

வார்டில் இருந்த மற்ற நோயாளிகளும் தாதியர்களும் அதிர்ச்சியடைந்தனர்.

“பாம்பை வெளியே விடுங்கள், அப்போதுதான் சிகிச்சை அளிக்க முடியும். உயிருள்ள பாம்பை வைத்துக்கொண்டு சிகிச்சை அளிப்பது மற்ற நோயாளிகளுக்கும் ஆபத்தானது,” என்று தலைமை மருத்துவர் கூறியும் தீபக் கேட்கவில்லை.

“பாம்பை நீங்கள் நேரில் பார்த்தால்தான் எனக்குச் சரியான சிகிச்சை அளிக்க முடியும். எனக்கு முதலில் சிகிச்சை கொடுங்கள், பிறகு பாம்பை விடுவிக்கிறேன்,” என்று கூறிய தீபக், பாம்பை விடுவிப்பதற்கு மறுத்துவிட்டார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், மருத்துவமனை நிர்வாகம் உடனடியாகக் காவல்துறைக்கும் வனத்துறையினருக்கும் தகவல் கொடுத்தது.

சம்பவ இடத்திற்கு வந்த காவலர்கள், தீபக்கை எச்சரித்து நிலைமையை விளக்கிக் கூறினர்.

நீண்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சமாதானமடைந்த தீபக், பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.

அதன்பிறகு, தீபக்கிற்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் ஆபத்தான கட்டத்தைத் தாண்டி நலமுடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்