தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஏரிக்குள் குதித்து மீன்பிடிக்க முயன்றவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

1 mins read
48c8fe48-0ede-46c9-ba3c-3c08116b67f6
இதற்குமுன் பலமுறை நீரில் குதித்து மீனுடன் கரையேறிய ரவி, இம்முறை நீருக்குள்ளேயே தமது இறுதிமூச்சை விட நேரிட்டது. - மாதிரிப்படம்

ஹைதராபாத்: ஏரியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி 45 வயது ஆடவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நிகழ்ந்தது.

அங்குள்ள ஹைதர் செருவு ஏரியில் சனிக்கிழமை (டிசம்பர் 14) பிற்பகலில் இவ்விபத்து நேர்ந்தது.

ஜெ.ரவி என்ற அந்த ஆடவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர்.

ரவி அடிக்கடி அந்த ஏரிக்குச் சென்று மீன்பிடிப்பது வழக்கம் எனக் கூறப்பட்டது.

இந்நிலையில், சனிக்கிழமையன்று அவரது தூண்டிலில் மீன் எதுவும் சிக்கவில்லை. இதனையடுத்து, தண்ணீருக்குள் குதித்து மீனைப் பிடித்துவிடலாம் என்று அவர் எண்ணினார். ஏற்கெனவே பலமுறை அவர் அப்படிச் செய்து, மீனுடன் திரும்பியதாகவும் காவல்துறை தெரிவித்தது.

ஆனால், இம்முறை ஏரிக்குள் குதித்த அவர், நீரிலிருந்து மீண்டும் வெளியில் வரவே இல்லை.

ஏரிக்கு அருகே ஒருவரின் காலணிகள் கிடப்பதைக் கண்டு அவ்வழியாகச் சென்ற ஒருவர் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்குச் சென்ற காவல்துறை, ரவியின் உடலை மீட்டது.

அந்நேரத்தில் அவர் யாரென அடையாளம் காணப்படவில்லை. காவல்துறையால் தகவல் பரப்பப்பட்டதை அடுத்து, இறந்தது ரவி என்பதை அவருடைய சகோதரர் உறுதிப்படுத்தினார்.

குறிப்புச் சொற்கள்