போபால்: அரும்பொருளகத்திலிருந்து 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தொல்பொருள்களைக் களவாடிச் செல்ல முயன்ற ஆடவர் பிடிபட்டார்.
இச்சம்பவம் இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் உள்ள அரசு அரும்பொருளகத்தில் நிகழ்ந்தது.
வினோத் யாதவ் என்ற அந்த ஆடவர் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (செப்டம்பர் 1) உரிய பணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெற்று, அந்த அரும்பொருளகத்தினுள் நுழைந்தார். மாலையில் அரும்பொருளகம் மூடப்படும்வரை, அங்குள்ள படிக்கட்டு ஒன்றின் பின்புறம் அவர் மறைந்துகொண்டார்.
திங்கட்கிழமை அரும்பொருளகம் மூடப்பட்டிருந்தது.
அன்றைய நாளில், குப்தப் பேரரசுக் காலம் முதல் முகலாயப் பேரரசுக் காலம் வரையிலான, 200 தங்க, வெள்ளி நாணயங்களையும் மற்ற தொல்பொருள்களையும் திருடிய வினோத், 25 அடி உயரமுள்ள சுவரில் ஏறி, அங்கிருந்து தப்ப முயன்றார்.
ஆயினும், அச்சுவரில் ஏற முடியாததாலும் காயமடைந்ததாலும் அவரது எண்ணம் ஏடேறவில்லை.
மறுநாள் செவ்வாய்க்கிழமை அரும்பொருளகத்தைத் திறந்த ஊழியர்கள், பூட்டுகள் உடைக்கப்பட்டு, நாணயங்களும் கலைப்பொருள்களும் இருந்த பெட்டிகள் காலியாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனே அதுபற்றி காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
விரைந்து வந்த அரும்பொருளக வளாகத்தைச் சோதனையிட்ட காவல்துறையினர், அரும்பொருளகச் சுவரை ஒட்டி, காயமடைந்து விழுந்து கிடந்த வினோத்தைக் கைதுசெய்தனர்.
தொடர்புடைய செய்திகள்
அரும்பொருளகத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது, யாதவால் எளிதாகக் கொள்ளையடிக்க முடிந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று போபால் காவல்துறைத் துணை ஆணையர் ரியாஸ் இக்பால் கூறினார்.
சம்பவம் தொடர்பில் காவல்துறை வழக்கு பதிந்து விசாரித்து வருகிறது.