குழப்பம், அதிர்ச்சி: ஆடவரின் வாக்கைப் பெண் செலுத்தினார்!

குழப்பம், அதிர்ச்சி: ஆடவரின் வாக்கைப் பெண் செலுத்தினார்!

1 mins read
e502378e-53b2-461d-876f-4207e8e8a5f4
தமது வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் கூறும் செல்வின் பிரபு நாடார். - காணொளிப்படம்: ஊடகம்

தானே: மகாராஷ்டிராவின் தானே நாடாளுமன்றத் தொகுதியிலுள்ள ஒரு வாக்குச்சாவடிக்குச் சென்று தனது வாக்கைச் செலுத்த முயன்ற ஆடவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

அவரது வாக்கை ஏற்கெனவே ஒரு பெண் போட்டுச் சென்றுவிட்டார் என்று தேர்தல் பணியாளர் கூறியதே அதற்குக் காரணம்.

இதனால், அந்த ஆடவரால் வாக்களிக்க முடியாமல் போனது.

இதுகுறித்த காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது.

அக்காணொளியில், செல்வின் பிரபு நாடார் என்ற இந்த ஆடவர், தம்முடைய ஆதார் அட்டையையும் வாக்காளர் அடையாள அட்டையையும் காட்டியபடி, தமக்கு நேர்ந்ததை விளக்குகிறார்.

திங்கட்கிழமையன்று (மே 20) அனுமன் நகரிலுள்ள ஒரு வாக்குச்சாவடிக்குத் தான் சென்றபோது, தன்னை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று செல்வின் கூறினார். தமது வாக்கை பெண் ஒருவர் ஏற்கெனவெ போட்டுச் சென்றுவிட்டார் என்று அங்கிருந்த தேர்தல் பணியாளர் கூறியதைக் கேட்டு, செல்வின் அதிர்ச்சி அடைந்தார்.

“ஆடவரான என் வாக்கை எப்படிப் பெண் ஒருவர் செலுத்த முடியும் என்று அவரிடம் கேட்டேன். வாக்காளர் பட்டியலிலும் என் படம் தெளிவாக உள்ளது. அவர்களால் பதில் கூற முடியவில்லை,” என்று காணொளி வழியாக செல்வின் விளக்கினார்.

மேலும், நடந்ததற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த அவர், தம்முடைய வாக்குரிமையைச் செயல்படுத்த விடுமாறும் கோரியுள்ளார்.

அவரது இக்காணொளி இணையத்தில் பரவலாகி வருகிறது. இருப்பினும், இச்சம்பவம் உண்மையாக நடந்ததா என்பது குறித்தும் இதன் தொடர்பில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்ததா என்பது குறித்தும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

குறிப்புச் சொற்கள்