தவறான எண்ணில் அழைத்ததற்காக ஆடவர் அடித்துக் கொலை

தவறான எண்ணில் அழைத்ததற்காக ஆடவர் அடித்துக் கொலை

1 mins read
213c4317-67f5-4300-bf2f-2094896c8756
மாதிரிப்படம்: - ஊடகம்

பாட்னா: கைப்பேசியில் தவறான எண்ணை அழைத்ததற்காக 26 வயது ஆடவர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

போஜ்பூர் மாவட்டம், ஆரா நகரை ஒட்டிய மஜாவன் எனும் சிற்றூரைச் சேர்ந்தவர் ராகேஷ் சிங்.

கடந்த சனிக்கிழமை ரோஷன் குமார் என்ற நண்பருடன் தம் ஊரிலிருந்த காளி கோவில் அருகே ராகேஷ் நின்றிருந்தார். அப்போது, தவறுதலாக அதே ஊரைச் சேர்ந்த புல்ச்சுல் என்பவரை ராகேஷ் தமது கைப்பேசி வழியாக அழைத்துவிட்டார்.

இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. கைப்பேசி வழியாகவே இருவரும் சண்டை போட்டனர்.

இதனைத் தொடர்ந்து, இரவு 9 மணியளவில் அவ்விடத்திற்குச் சென்ற புல்ச்சுல், ராகேஷை அடித்து உதைத்ததோடு, கம்பாலும் தாக்கியதாகக் கூறப்பட்டது.

தன்னையும் புல்ச்சுல் தாக்கியதாகவும் சுயநினைவிழந்த ராகேஷை அங்கேயே விட்டுச் சென்றுவிட்டதாகவும் ரோஷன் கூறினார்.

தகவலறிந்து வந்த ராகேஷின் குடும்பத்தினர், அவரை மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆனால், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர்.

இதனையடுத்து, புல்ச்சுல் உள்ளிட்ட நால்வர்மீது வழக்கு பதிந்த காவல்துறை, தலைமறைவாகிவிட்ட அவர்களைத் தேடி வருகிறது.

உயிரிழந்த ராகேஷ் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காவலர் தேர்வில் பங்கேற்கவிருந்ததாகக் கூறப்பட்டது.

குறிப்புச் சொற்கள்