நாக்பூர்: ரயில் நிலைய நடைமேடையில் உறங்கிக்கொண்டிருந்தோர்மீது ஆடவர் ஒருவர் கல்லால் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்; மேலும் நால்வர் காயமடைந்தனர்.
இச்சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலம், நாக்பூர் ரயில் நிலையத்தில் திங்கட்கிழமை (அக்டோபர் 7) அதிகாலை நிகழ்ந்தது.
ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்தப்படும், கிட்டத்தட்ட 50 கிலோ எடையுள்ள கான்கிரீட் துண்டுகளால் அந்த ஆடவர் தாக்கியதாக ரயில்வே காவல்துறை தெரிவித்தது.
தாக்குதலுக்கு ஆளானவர்களின் அலறலைக் கேட்டு, ரயில்வே காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
மாண்டவர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த 54 வயது கணேஷ் குமார் என அடையாளம் காணப்பட்டார். இன்னொருவர் ஆதரவற்றவர்.
தாக்குதலில் காயமடைந்த மேலும் நால்வர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ ஊடகச் செய்தி தெரிவித்தது.
இச்சம்பவம் தொடர்பில் ஜெய் குமார் கேவத், 45, என்ற ஆடவரை ரயில்வே காவல்துறை கைதுசெய்து விசாரித்து வருகிறது. அவர் பிச்சைக்காரர் என்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் சொல்லப்படுகிறது.
அவர் திடீரெனத் தாக்குதலில் இறங்கியதற்கு என்ன காரணம் எனக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

