குருகிராம்: சாலையில் காரில் சென்றவாறே வாணங்களைக் கொளுத்தி வெடிக்கச் செய்த ஆடவர் சிலரைக் காவல்துறை கைதுசெய்தது.
இந்தியாவின் அரியானா மாநிலம், குருகிராமில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தில் பரவ, அந்த ஆடவர்களின் செயலுக்குப் பலரும் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
தங்களை யாரும் கண்டுபிடித்துவிடக்கூடாது என்பதற்காக அக்காரின் பதிவெண் பலகையை அவர்கள் அகற்றிவிட்டதாகவும் காவல்துறை துணை ஆணையர் வீரேந்தர் விஜ் தெரிவித்ததாக ‘நியூஸ்18’ செய்தி வெளியிட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்த 14 நொடிக் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது. அதில், காரிலிருந்தவர்களில் ஒருவர் அதன் கதவைத் திறந்து சாய்ந்து நின்றிருந்ததையும் அதிலிருந்து வாணங்கள் பறந்ததையும் காண முடிந்தது.
வாணங்களைப் பறக்கவிட்ட காருடன் வேறு சில கார்களும் சென்றதாகச் சொல்லப்படுகிறது. அவற்றுள் ஒரு காரிலிருந்தே அச்சம்பவம் படம்பிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் மற்ற கார்களின் விவரங்களையும் பகிர்ந்துகொள்ளும்படி குருகிராம் காவல்துறை, வட்டாரப் போக்குவரத்து ஆணையத்திற்கு எழுதியுள்ளது.
குருகிராமில் இப்படி நடந்தது இது முதன்முறையன்று. கடந்த தீபாவளியின்போது சாலையில் சென்ற ஒரு காரின் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஒரு பெட்டியிலிருந்து வாணங்கள் வெடித்துக் கிளம்பிய காணொளி பரவலானது. அதன் தொடர்பில் அப்போதும் சிலரைக் காவல்துறை கைதுசெய்தது.