தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உறவினரின் நிறுவனத்தில் வேலைசெய்ய விரும்பாததால் கைவிரல்களை வெட்டிக்கொண்ட ஆடவர்

2 mins read
315d6354-4928-47d3-a5e3-37ca74d83081
தன் கைவிரல்களைத் தானே துண்டாக்கிவிட்டு நாடகமாடிய மயூர் தாரப்பாரா. - படங்கள்: இந்திய ஊடகம்

சூரத்: தம்முடைய உறவினரின் வைர நிறுவனத்தில் வேலை செய்வதைத் தவிர்ப்பதற்காக 32 வயது ஆடவர் ஒருவர் தமது இடக்கையின் நான்கு விரல்களைக் கத்தியால் வெட்டிக்கொண்டார்.

இச்சம்பவம் இந்தியாவின் குஜராத் மாநிலம், சூரத் நகரில் டிசம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்தது.

மயூர் தாரப்பாரா என்ற அந்த ஆடவர், தான் சாலையோரமாக மயங்கி விழுந்துவிட்டதாகவும் எழுந்து பார்த்தபோது விரல்கள் துண்டாடப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் காவல்துறையிடம் கூறினார்.

ஆயினும், விசாரணையில் அவரே விரல்களை வெட்டிக்கொண்டது கண்டறியப்பட்டது.

தம்முடைய உறவினருக்குச் சொந்தமான ‘அனாப் ஜெம்ஸ்’ நிறுவனத்தில் வேலை செய்ய மயூருக்கு விருப்பமில்லை என்றும் அதனைத் தம் உறவினரிடம் சொல்ல அவருக்குத் துணிவு வரவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது.

அனாப் ஜெம்ஸ் நிறுவனத்தின் கணக்கியல் துறையில் கணினி இயக்காளராகப் பணிபுரிந்து வந்தார் மயூர்.

தன் விரல்கள் வெட்டப்பட்டதாக மயூர் புகாரளிக்கவே, மாந்திரீக நோக்கங்களுக்காக அவ்வாறு செய்யப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை சந்தேகப்பட்டது. ஆனால், கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியை ஆராய்ந்தபோது, அவரே விரல்களை வெட்டிக்கொண்டது தெரியவந்தது.

விசாரணையில் விரல்களைத் தானே வெட்டிக்கொண்டதை அவர் ஒத்துக்கொண்டார்.

“தானே கடைக்குச் சென்று ஒரு கத்தியை வாங்கியதை மயூர் ஒத்துக்கொண்டார். நான்கு நாள்களுக்குப் பிறகு, மோட்டார்சைக்கிளில் சென்ற அவர் சாலையோரமாக அதனை நிறுத்தினார். இரவு 10 மணியளவில் தமது விரல்களை வெட்டிக்கொண்ட அவர், ரத்தம் கசிவதைத் தடுக்க முழங்கையை ஒட்டி கயிற்றால் கட்டினார். பின்னர் கத்தியையும் விரல்களையும் ஒரு பையில் போட்டு வீசி எறிந்துவிட்டார்,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் விவரித்தார்.

பின்னர் தன் நண்பர்களால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் என்றும் மூன்று விரல்களுடன் ஒரு பையும் கத்தியுடன் இன்னொரு பையும் கண்டெடுக்கப்பட்டன என்றும் அந்த அதிகாரி கூறினார்.

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.

குறிப்புச் சொற்கள்