போபால்: கோமா நிலையில் இருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்த ஆடவர் திடீரென படுக்கையில் இருந்து எழுந்து நடமாடியது அவரது குடும்பத்தாருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளையர் பன்டி நினாமா என்பவர் சண்டையின்போது முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட காயத்துக்காக அண்மையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டதாக மருத்துவர்கள் கூறி உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
சிகிச்சைக்கான பணத்தைப் புரட்ட அவரது குடும்பத்தார் போராடிய நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இளையர் பன்டி நினாமா திடீரென கண்விழித்தார். பிறகு வெகு இயல்பாய் எழுந்து நடமாடத் தொடங்கினார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்து அவர் நடந்து வெளியே வந்ததைக் கண்ட பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சி அடைய, பன்டி நினாமாவோ அவர்களிடம், மருத்துவமனை ஊழியர்கள் ஐந்து பேர் தம்மை வலுக்கட்டாயமாக பிடித்து வைத்துக் கொண்டதாகக் கூறியுள்ளார்.
அவர்களின் பிடியில் இருந்து தாம் தப்பிவிட்டதாக அவர் கூறியதை அடுத்து, சிகிச்சை அளித்த மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர்.


