பாட்னா: இந்திய விமானப் படையின் ஹெலிகாப்டரிலிருந்து வீசப்பட்ட நிவாரண உணவுப் பொட்டலம் தாக்கி, ஆடவர் ஒருவர் உயிரிழந்த சோகம் பீகார் மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் நேர்ந்தது.
பீகாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறி, பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அம்னூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பர்சுராம்பூர் எனும் சிற்றூரில் வெள்ளத் துயர்துடைப்புப் பணிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 2) நடைபெற்றன.
அப்போது, அனில் குமார் சிங் என்ற 62 வயது வணிகர் தமது வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார். தாழ்வாகப் பறந்த ஹெலிகாப்டரிலிருந்து ஏறக்குறைய 5 கிலோ எடையுள்ள உணவுப் பொட்டலங்கள் வீசப்பட்டன. அவற்றில் ஒரு பொட்டலம் நேரடியாக அனில் குமாரின் தலையில் விழ, அவர் சுருண்டு விழுந்தார்.
சில நொடிகளில் இன்னொரு பொட்டலம் அவரது நெஞ்சில் விழுந்ததில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அவருடைய மகன் தெரிவித்தார்.
அனில் குமாரின் இறப்பிற்கான சரியான காரணம் உடற்கூறாய்வுக்குப் பிறகே தெரியவரும் என்று காவல்துறை அதிகாரி விமலேஷ் குமார் கூறினார்.
இதனிடையே, உணவுப் பொட்டலத்திற்காக தமது வீட்டின் மேற்கூரையில் நின்று கொண்டிருந்த விமலா தேவி என்ற 45 வயது பெண்ணும் அவருடைய இரு குழந்தைகளும் காயமடைந்தனர். ஹெலிகாப்டர் அருகில் வந்தபோது வீசிய பெருங்காற்றின் விசையால் அவர்கள் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மூவரும் சாப்ரா சதர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் தாழ்வாகப் பறந்த நிலையில், உள்ளூர்வாசிகள் பலர் அதன் பின்னே ஓடும் காணொளி இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் சரண் மாவட்டத்தில் 170 சிற்றூர்களைச் சேர்ந்த 75,286 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதுவரை 43,400 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
