திருச்சூர்: மருத்துவரின் கவனக்குறைவால் அறுவை சிகிச்சையின்போது 49 வயது ஆடவர் உயிரிழக்க நேரிட்டது.
இச்சம்பவம் இந்தியாவின் கேரள மாநிலம், குன்னம்குளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்தது.
வெள்ளாரக்காட்டைச் சேர்ந்த இலியாஸ் முகம்மது என்ற அந்த ஆடவர் உயிரிழந்ததற்கு மருத்துவர்களின் கவனக்குறைவே காரணம் எனக் குற்றஞ்சாட்டப்பட்டது.
இலியாசுக்கு ஏற்பட்ட குடலிறக்கத்தைச் சரிசெய்வதற்காக குன்னம்குளம் இட்டிமானி மருத்துவமனையில் வியாழக்கிழமை (அக்டோபர் 16) பிற்பகலில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவர் உயிரிழந்துவிட்ட தகவல் இரவு 8.30 மணிக்கே அவரின் குடும்பத்தினர்க்குத் தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, மயக்க மருந்து கொடுத்ததே இலியாஸ் மரணத்திற்குக் காரணம் எனக் கூறி, அவரின் குடும்பத்தினர் மருத்துவமனைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர். மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என்றும் ஊழியர்கள் கவனக்குறைவுடன் நடந்துகொண்டனர் என்றும் அவர்கள் சாடினர்.
அதனைத் தொடர்ந்து, அறுவை சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவர் விஜயன் நாயர், இலியாஸ் உயிரிழந்ததற்கு தானே காரணம் என எழுதிக் கொடுத்தார். இதுகுறித்துக் கருத்துரைக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது.
இட்டிமானி மருத்துவமனையில் அவசர சிகிச்சை வசதிகள் இல்லை என்றும் அறுவை சிகிச்சைக் கூடமும் அதனைச் சுற்றிய பகுதிகளும் தூய்மையற்ற நிலையில் இருக்கின்றன என்றும் இலியாசின் உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
அத்துடன், காலாவதியான மருந்துகள் பல அம்மருத்துவமனையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
தொடர்புடைய செய்திகள்
இதனிடையே, இலியாசின் மரணம் தொடர்பில் வழக்கு பதிந்துள்ள குன்னம்குளம் காவல்துறை, இயற்கைக்கு மாறானது என அதனை வகைப்படுத்தி விசாரணை நடத்தி வருகிறது.