தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தலைக்கவசத்திற்குள் ஒளிந்திருந்த ஆபத்து!

1 mins read
b4eac0f3-65fe-4951-8863-d83937c5f0c5
தலைக்கவசத்தின் உட்புறமும் அதனுள் இருந்த பாம்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத் தோற்றமளித்தது இணையவாசிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. - படம்: இன்ஸ்டகிராம்/தேவ் ஷ்ரேஷ்தா

புதுடெல்லி: இந்தியாவில் பாம்புகளுக்குப் பஞ்சமில்லை. அங்கு கிட்டத்தட்ட 300 வகையான பாம்பு இனங்கள் உள்ளன. அவற்றில் பலவும் கொடிய நஞ்சு கொண்டவை.

வனப்பகுதிகள், கிணறுகள், வடிகால்கள் எனப் பல இடங்களிலும் தென்படும் பாம்புகள், சில நேரங்களில் காலணி போன்றவற்றினுள்ளும் புகுந்துகொண்டு வியப்பும் அதிர்ச்சியும் அளிக்கின்றன.

அவ்வகையில், மோட்டார்சைக்கிளோட்டியின் தலைக்கவசத்திற்குள் பாம்பு ஒன்று படமெடுத்த நிலையில் இருந்த காணொளி வெளியாகி, சமூக ஊடகங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது.

தேவ் ஷ்ரேஷ்தா என்ற இன்ஸ்டகிராம் பயனர் அக்காணொளியைப் பகிர்ந்துள்ளார்.

இதில் வியப்பு என்னவெனில், தலைக்கவசத்தின் உட்புறத்தைப் போன்று பாம்பும் இருந்ததால், முதலில் பார்க்கும்போதே அதனைக் கண்டறிவது பலருக்கும் சவாலாக இருக்கலாம்.

சற்று உற்றுப் பார்த்தால், தலைக்கவசத்தினுள் ஒளிந்திருக்கும் ஆபத்து தென்படலாம்.

அந்தப் பாம்பு படமெடுத்த நிலையில், எவரேனும் சீண்டினால் கொத்தத் தயாராக இருப்பதுபோல் காணப்பட்டது.

தலைக்கவசத்தின் உட்புறமும் பாம்பும் தோற்றத்தில் ஒரே மாதிரியாக இருப்பது கண்டு அக்காணொளியைக் கண்ட சமூக ஊடகவாசிகள் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர், பாம்பு தன் பாதுகாப்பிற்காகத் தலைக்கவசத்தை அணிந்துள்ளது என்று வேடிக்கையாகக் குறிப்பிட்டுள்ளனர்.

View post on Instagram
 

இத்தகைய நிகழ்வு இடம்பெறுவது இது முதன்முறையன்று.

கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவின் கேரள மாநிலம், திருச்சூரைச் சேர்ந்த சோஜன் என்பவரது தலைக்கவசத்திற்குள்ளும் ஒரு சிறிய கருநாகம் புகுந்துவிட்டது. பின்னர் லிஜோ என்ற பாம்பாட்டியின் துணை அவர் அதனைப் பிடித்தார்.

குறிப்புச் சொற்கள்