30 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு சிங்கத்திடமிருந்து தப்பிய ஆடவர்

30 நிமிடப் போராட்டத்துக்குப் பிறகு சிங்கத்திடமிருந்து தப்பிய ஆடவர்

1 mins read
f88127cd-ebd1-4629-80d5-dcead141a98d
ஆடவரின் கை சிங்கத்தின் வாயிலும் அவரது ஒருகால் சிங்கத்தின் கால்களுக்கு இடையிலும் சிக்கியிருந்தன.  - படம்: இந்தியன் எக்ஸ்பிரஸ்

அலகாபாத்: சிங்கத்திடம் சிக்கிய ஆடவர் ஒருவர் முப்பது நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அதிர்ஷ்டவசமாக அதன் பிடியிலிருந்து தப்பித்தார்.

இந்தியாவின் குஜராத் மாநிலம், பாவ்நகர் மாவட்டத்திலுள்ள கராஜியா கிராமத்​துக்​குள் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 6) சிங்கம் ஒன்று புகுந்துவிட்டது. அங்கு பார்மர் என்பவருக்குச் சொந்தமான பசு மாடுகளைப் பராமரிக்கும் கூடாரம் அருகே அந்தச் சிங்கம் பதுங்கியிருந்ததைக் கவனிக்காத அவர் பசு மாட்டுத் தீவனத்துடன் அங்குச் சென்றார்.

அவரைப் பார்த்த சிங்கம், அசுர வேகத்தில் அவர்மீது பாய்ந்தது. பார்மரின் அலறல் சட்டம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்தனர்.

எனினும், பார்மரின் கை சிங்கத்தின் வாயிலும் அவரது ஒருகால் சிங்கத்தின் கால்களுக்கு இடையிலும் சிக்கியிருந்தன.

அதனால் சிங்கத்தை விரட்ட முடியவில்லை. எனினும் சிங்கம் ஏறக்குறைய அரை மணி நேரம் பார்மரைத் தனது பிடிக்குள் வைத்திருந்தது.

அதேநேரம், அவரை ஆவேசமாகத் தாக்காத நிலையில் கிராம மக்கள் சிங்கத்தின்மீது கற்களை வீசித் தாக்கினர்.

ஒருகட்டத்தில் மக்கள் கூட்டம் அதிகரித்த நிலையில் அருகிலிருந்த பசு மாட்டைக் கண்டதும் சிங்கம் அதை நோக்கிச் சென்றது. அதனால், பார்மர் உயிர்தப்பினார்.

மருத்துவமனையில் பார்மர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், சிங்கத்திடம் அவர் சிக்கியபோது எடுக்கப்பட்ட காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

குறிப்புச் சொற்கள்