தோழியுடன் இருந்த படங்கள் மனைவிக்குச் சென்றதால் ஆடவருக்கு சிக்கல்

1 mins read
8a3cfe13-bf1e-43bb-bea8-fc8968486dc0
ஏப்ரல் 25ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் தலைக்கவசம் அணியாமல் தம் தோழியுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆடவர் ஒருவரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார். படம்: இந்திய ஊடகம் -

போக்குவரத்து விதிமுறைகள் குடும்பங்களில் பிரச்சினையை ஏற்படுத்த முடியுமா என்பது பற்றி சிந்தித்துப் பார்த்தது உண்டா?

இந்தியாவின் கேரள மாநிலத்தில், சாலைகளில் பொருத்தப்பட்டு இருக்கும் பாதுகாப்புக் கண்காணிப்புக் கருவிகள் காரணமாக மாநில அரசாங்கத்திற்கு மட்டும் தலைவலி ஏற்படவில்லை.

ஏப்ரல் 25ஆம் தேதி, திருவனந்தபுரத்தில் தலைக்கவசம் அணியாமல் தன் தோழியுடன் மோட்டார்சைக்கிளில் சென்ற ஆடவர் ஒருவரும் பிரச்சினையில் மாட்டிக்கொண்டார்.

காவல்துறை வழக்கில் சிக்கிக்கொண்ட அந்த ஆடவர் கைது செய்யப்பட்டதாக பிடிஐ செய்தித்தளம் குறிப்பிட்டது.

அந்த ஆடவர் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் அவருடைய மனைவிக்குச் சொந்தமானது. எனவே, அந்த ஆடவர் போக்குவரத்து விதிகளை மீறியது குறித்த விவரங்களும் அவரும் அவருடைய தோழியும் மோட்டார்சைக்கிளில் இருந்ததைக் காட்டும் கண்காணிப்புக் கருவியில் பதிவான புகைப்படங்களும் அந்த மாதின் கைப்பேசிக்குக் குறுந்தகவலாக அனுப்பி வைக்கப்பட்டன.

குறுந்தகவல் கிடைத்தவுடன் கணவரிடம் அந்த மாது விசாரித்தார். மோட்டார்சைக்கிளில் கணவருடன் இருந்த பெண் யார் என்பது பற்றி மனைவி வினவினார்.

அந்தப் பெண்ணுடன் தமக்கு உறவு எதுவுமில்லை என்று கூறிய அந்தக் கணவர், மோட்டார்சைக்கிளில் தாம் 'லிஃப்ட்' மட்டுமே கொடுத்ததாகச் சொன்னார். ஆனால், அவருடைய மனைவி அதை நம்பவில்லை.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தம்மிடமும் தங்களது மூன்று வயதுக் குழந்தையிடமும் தம் கணவர் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகக் கூறி மே 5ஆம் தேதி காவல்துறையிடம் அந்த மாது புகார் அளித்தார்.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அந்த ஆடவர், பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார்.