லக்னோ: பேருந்தில் பயணம் செய்தவாறு வெளியே எச்சில் துப்பிய முதியவர் ஒருவர் பேருந்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
அந்தச் சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூரில் சனிக்கிழமை (நவம்பர் 30) நிகழ்ந்தது.
மாண்டவர் 65 வயது விவசாயி என்றும் அவரது பெயர் ராம் ஜியாவான் என்றும் காவல்துறை கூறியது.
லக்னோவில் இருந்து அஸாம்கரில் உள்ள தமது சொந்தக் கிராமத்திற்குச் செல்ல பூர்வாஞ்சல் விரைவுப் பேருந்தில் அவர் ஏறினார். அது குளிரூட்டி வசதி கொண்ட பேருந்து என்பதால் கதவுகள் அடைக்கப்பட்டு இருந்தன.
பீஹி என்னும் கிராமம் அருகே பேருந்து சென்றபோது, தமது வாயில் குதப்பி இருந்த புகையிலையைத் துப்ப அந்த முதியவர் பேருந்தின் கதவைத் திறந்தார். அப்போது நிலை தடுமாறி, விரைவாகச் சென்றுகொண்டு இருந்த பேருந்தில் இருந்து அவர் கீழே விழுந்தார்.
சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக பேருந்தின் ஓட்டுநர் ஹரிச்சந்திர திவாரி கூறினார்.
விவரம் அறிந்து விரைந்து சென்ற காவல்துறை ராம் ஜியாவானை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றது. ஆயினும் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை தெரிவித்தது.
உயிரிழந்த அந்த முதியவரின் மகனும் மகளும் காவல்துறையில் வேலை செய்வதாக காவல்துறை அதிகாரி தீரஜ் குமார் கூறினார்.

