தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கடப்பிதழின்றி அமெரிக்காவிற்குத் தப்பியோடிய இந்தியர்; உச்ச நீதிமன்றம் வியப்பு

2 mins read
00840a87-cc04-4e6f-969f-7771e2b95d51
தப்பிய ஆடவரைக் கைதுசெய்ய ஆன அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என இந்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - படம்: ஊடகம்

புதுடெல்லி: நீதிமன்றத்திடம் கடப்பிதழ் இருந்தபோதும் இந்திய ஆடவர் ஒருவர் அமெரிக்காவிற்குத் தப்பியோடியதை அறிந்து உச்ச நீதிமன்றம் வியப்படைந்துள்ளது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்பில் அந்த ஆடவரைக் கைதுசெய்து விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிற்குத் தப்பியோடிவிட்டார்.

இதனையடுத்து, அந்த ஆடவர் எப்படி இந்தியாவைவிட்டு வெளியேற அனுமதிக்கப்பட்டார் என்பதை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்த வேண்டும் என்று அரசாங்கத்தின் கூடுதல் தலைமை வழக்கறிஞருக்கு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்டுள்ளது.

“குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் கடப்பிதழ் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தும் அவர் நாட்டைவிட்டு வெளியேறி அமெரிக்கா சென்றது வியப்பளிக்கிறது. அவருக்கு எதிராக பிணையில் வெளிவர முடியாதபடி கைதாணை பிறப்பிக்கிறோம்,” என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

குழந்தையை யார் வைத்துக்கொள்வது என்பது தொடர்பில் அந்த ஆடவருக்கும் அவரது முன்னாள் மனைவிக்கும் இடையிலான வழக்கு நிலுவையில் உள்ளது.

இதனையடுத்து, அந்த ஆடவரைக் கைதுசெய்து, அவரை நீதியின்முன் நிறுத்த மத்திய உள்துறை அமைச்சு தேவையான எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இவ்வழக்கு விசாரணை பிப்ரவரி 19ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

கடந்த 2006ஆம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி அத்தம்பதியர்க்குத் திருமணமானது. அவர்களுக்குப் பத்து வயதில் ஒரு மகன் இருக்கிறான்.

இருப்பினும், கருத்து வேற்றுமை காரணமாக 2017 செப்டம்பர் 12ஆம் தேதியன்று அமெரிக்க நீதிமன்றத்தின்மூலம் இருவரும் மணவிலக்கு பெற்றனர்.

அதன்பின், தம் முன்னாள் கணவர்மீது அப்பெண் இந்தியாவில் சட்டரீதியாகப் பல நடவடிக்கைகளைத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து, 2019 அக்டோபர் 19ஆம் தேதியன்று உச்ச நீதிமன்றத்தில் இருவருக்கும் இடையே சமரசம் எட்டப்பட்டது. அதன்படி, மகனைத் தன் முன்னாள் மனைவியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

ஆனால், அவர் தன் மகனை ஒப்படைக்கத் தவறியதை அடுத்து, அவர்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்