புதுடெல்லி: அபுதாபி அரச குடும்பத்தின் பணியாளர் எனக் கூறிக்கொண்டு, டெல்லி சொகுசுவிடுதியில் நான்கு மாதங்களாகத் தங்கியிருந்த ஆடவர் ஒருவர், அதற்கான ரூ.23 லட்சம் கட்டணத்தைச் செலுத்தாமல் அங்கிருந்து மாயமாகிவிட்டார்.
இதனையடுத்து, முகம்மது ஷரிஃப் என்ற அந்த ஆடவர்மீது டெல்லி லீலா பேலஸ் ஹோட்டல் நிர்வாகம் காவல்துறையில் புகார் அளித்தது.
அதனடிப்படையில், காவல்துறை ஷரிஃப்மீது மோசடி, திருட்டுக் குற்றச்சாட்டுகளைப் பதிவுசெய்து, அவரைத் தேடி வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 1ஆம் தேதியிலிருந்து அந்த ஹோட்டலின் அறை எண் 427ல் தங்கியிருந்த அவர், நவம்பர் 20ஆம் தேதி சொல்லாமல் கொள்ளாமல் அங்கிருந்து மாயமானார்.
போகும்போது அங்கிருந்த வெள்ளிப் பாத்திரங்கள், முத்துத் தட்டு உள்ளிட்ட விலையுயர்ந்த பொருள்களையும் அவர் களவாடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
தான் ஐக்கிய அரபுச் சிற்றரசில் (யுஏஇ) வசிப்பவன் என்றும் அபுதாபி ஷேக் குடும்பத்திற்கு நெருக்கமானவன் என்றும் விடுதி ஊழியர்களிடம் ஷரிஃப் கூறியுள்ளார்.
தொழில் காரணங்களுக்காக இந்தியா வந்துள்ளதாகக் கூறிய அவர், தாம் சொல்லும் கதையை உறுதிப்படுத்துவதற்காக வணிக அட்டை, யுஏஇ குடியிருப்பாளர் அட்டை மற்றும் பிற ஆவணங்களையும் விடுதி ஊழியர்களிடம் காட்டினார்.
அத்துடன், அவ்வப்போது தமது யுஏஇ வாழ்க்கை குறித்தும் விடுதி ஊழியர்களிடம் கதையளப்பதை அவர் வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
அந்த ஆவணங்களைச் சோதித்த காவல்துறை, அவை போலியானதாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறது.
நான்கு மாத அறை வாடகை, இதர சேவைகளுக்காக ஷரிஃப் மொத்தம் 35 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், அவர் ரூ.11.5 லட்சத்தை மட்டுமே செலுத்திவிட்டு மாயமானார்.
கண்காணிப்புப் படக்கருவிகளுடன் துணைகொண்டு அந்த மோசடிப் பேர்வழியை அடையாளம் காணும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.

