16 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டவர் உயிருடன் வந்தார்; கொலை வழக்கு நீடிப்பு

2 mins read
eaf729c0-0d8e-4e76-9077-8469d7c01b21
2009ஆம் ஆண்டு கொல்லப்பட்டதாகக் கருதப்பட்ட நாதுனி பால், 50. - படம்: இந்திய ஊடகம்

பாட்னா: பீகார் மாநிலம் டியோரியா பகுதியைச் சேர்ந்த நாதுனி பால், 50, என்பவர் கடந்த 2009ஆம் ஆண்டு தனது வீட்டிலிருந்து காணாமல் போனார். அப்போது, அவரது மாமா மற்றும் அவரது சகோதரர்கள் நால்வர் சேர்ந்து நாதுனியின் நிலத்துக்காக அவரைக் கொலை செய்துவிட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கொலையாளிகள் எனக் குற்றம்சாட்டப்பட்ட நால்வரும் சுமார் 8 மாதக் காலம் சிறைத் தண்டனை அனுபவித்தனர். அவரது மாமா உயிரிழந்துவிட்ட நிலையில் எஞ்சிய மூவரும் பிணையில் வெளியே வந்தனர்.

இந்நிலையில், இம்மாதம் 6ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்சியில் காவல் துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஒரு நபர் கடந்த 6 மாதமாக ஜான்சியில் வாழ்ந்து வருவதை அறிந்து அவரிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அந்த நபர் பீகார் மாநில ஆவணங்களில் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, அந்நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் பெயர் நாதுனி பால் என்றும் சிறு வயதிலேயே பெற்றோர் இழந்த அவரது மனைவியும் பிரிந்து சென்றதினால் அவர் தனது வீட்டைவிட்டு வெளியேறி விட்டதாகக் கூறியுள்ளார். மேலும், அவர் பீகாரிலுள்ள தனது சொந்த ஊருக்குச் சென்று 16 ஆண்டுகள் ஆகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

பின்னர், நாதுனி பால் உயிருடன் இருப்பது குறித்து அம்மாநில காவல் துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்தத் தகவலை அறிந்த குற்றம்சட்டப்பட்ட அவரது உறவினர்கள், ஒரு வழியாக இந்தக் கொலைப் பழியிலிருந்து தாங்கள் விடுதலை பெற்றுள்ளதாகக் கூறி கண்ணீர் விட்டு அழுதனர்.

இருப்பினும், இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளதால் நாதுனி பாலை, ஜான்சி காவல் துறையினர், பீகார் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

குறிப்புச் சொற்கள்