இந்தியாவின் முன்னணித் தொழிலதிபராகவும் வள்ளலாகவும் மதிப்புமிக்க மனிதராகவும் திகழ்ந்த திரு ரத்தன் டாடா அண்மையில் தமது 86ஆவது வயதில் காலமானார்.
அவரது மறைவு, இந்தியர்களுக்குப் பெருந்துயரம் அளிப்பதாக அமைந்தது.
அதனைத்தொடர்ந்து, நவராத்திரிக் கொண்டாட்டங்கள் ரத்து, இணையத்தில் ஊடுருவி அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தது எனப் பலவழிகளிலும் திரு ரத்தன் டாடா மீதான தங்களின் அன்பையும் மரியாதையையும் பலரும் வெளிப்படுத்தி வந்தனர்.
அவ்வகையில், திரு டாடாவின் முகத்தைத் தன் நெஞ்சில் பச்சையாகக் குத்தி, புகழஞ்சலி செலுத்துவதில் உச்சத்திற்கே சென்றுவிட்டார் இந்திய ஆடவர் ஒருவர்.
அவர் அப்படிச் செய்ததற்கு உணர்வுபூர்வமானதொரு காரணம் இருக்கிறது.
சில ஆண்டுகளுக்குமுன் அந்த ஆடவரின் நண்பர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. அதற்கான சிகிச்சைக்குச் செலவு அதிகம் என்பதால், அவ்வளவிற்கு அவர்கள் வசதி படைத்தவர்களாக இல்லை.
அவ்வேளையில்தான் டாடா அறக்கட்டளை அவர்களுக்குக் கைகொடுத்தது. முழுக்க முழுக்க இலவசமாக அளிக்கப்பட்ட சிகிச்சைமூலம் அந்த ஆடவரின் நண்பர் குணமடைந்தார்.
தக்க நேரத்தில் உதவி கிடைத்ததால் அந்த நன்றியை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பதற்காக, தன் நெஞ்சில் திரு டாடாவிற்கு நிரந்தரமாக இடமளித்துள்ளார் அந்த ஆடவர்.
தொடர்புடைய செய்திகள்
திரு டாடாவின் முகத்தை அவர் தன் நெஞ்சில் பச்சை குத்திக்கொண்ட காணொளி இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.