கொச்சி: கேரள மாநிலத்தின் ஆகப் பெரிய வெளிநாட்டு வேலை மோசடி தொடரில் தேடப்பட்டு வந்தவர் பல மாதங்களுக்குப்பின் பிடிபட்டார்.
தொடுபுழாவைச் சேர்ந்த கே.ஜே. ஜோதீஷ் என்ற இந்த ஆடவரை எர்ணாகுளம் காவல்துறையினர் பெங்களூரில் கைதுசெய்தனர்.
பெங்களூரில் அவர் விமல் என்ற பெயரில் தலைமறைவாக இருந்ததாகக் கூறப்பட்டது.
‘பெத்தானி டூர்ஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற நிறுவனத்தின் பெயரில் இடம்பெற்ற ஆட்சேர்ப்பு மோசடியின் மூளையாகச் செயல்பட்டவர் ஜோதீஷ்தான் என்று காவல்துறை கூறுகிறது.
கொச்சி உள்ளிட்ட கேரளத்தின் பல பகுதிகளில் அலுவலகங்களை அமைத்துச் செயல்பட்ட அந்நிறுவனம், கனடாவிலும் ஆஸ்திரேலியாவிலும் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பலரை ஈர்த்தது. அவர்களிடமிருந்து ‘செயல்பாட்டுக் கட்டணம்’ என்ற பெயரில் பல தவணைகளாக ரூ.1.5 லட்சத்திலிருந்து ரூ.2 லட்சம் வரை பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடித் திட்டத்தின்கீழ் 500க்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டதாக நம்பப்படுகிறது.
எர்ணாகுளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தம்மிடம் ரூ.1 லட்சம் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டதாகக் கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்த புகாரின் அடிப்படையில் ஜோதீஷ் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவ்வாண்டு மார்ச் மாதம் அவர் அந்தப் பணத்தை வங்கிக் கணக்கு வழியாக அனுப்பினார். அதன்பின் பலமுறை உறுதியளித்தபோதும் அப்பெண்ணுக்கு வெளிநாட்டு வேலையும் வாங்கித் தரப்படவில்லை; பணமும் திருப்பித் தரப்படவில்லை.
கடந்த எட்டு மாதங்களாக ஜோதீஷ் தலைமறைவாக இருந்தார். அவருடைய கூட்டாளிகள் இருவர் ஏற்கெனவே பிடிபட்டபோதும் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜோதீஷைப் பிடிப்பதற்காக ஏற்கெனவே இருமுறை பெங்களூரு சென்றபோதும் காவல்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது. இம்முறை ஒருங்கிணைந்து மேற்கொள்ளப்பட்ட முயற்சியின்மூலம் அவர் பிடிபட்டார். அடையாளத்தை மறைப்பதற்காக அவர் தனது மீசையையும் தாடியையும் மழித்துவிட்டார்.
“மோசடி செய்யப்பட்ட தொகையின் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறோம். பணம் எப்படிக் கைமாறியது, மோசடியின்மூலம் யாரெல்லாம் பயனடைந்தனர் என்பனவற்றைக் கண்டறிய மேலும் விசாரணை தேவைப்படுகிறது,” என்று காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
கைதுசெய்யப்பட்ட ஜோதீஷ் கொச்சிக்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, விசாரணைக் காவலில் வைக்கப்பட்டார்.

