லக்னோ: பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பலமுறை வாக்களித்த இளையரை உத்தரப் பிரதேச மாநிலக் காவல்துறை கைதுசெய்துள்ளது.
அங்குள்ள ஃபரூக்காபாத் நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடுகிறார் முகேஷ் ராஜ்புத்.
இந்நிலையில், அவருக்கு ஆதரவாக, ராஜன் சிங் என்ற இந்த ஆடவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் குறைந்தது எட்டு முறை பொத்தானை அழுத்திய காணொளி சமூக ஊடகங்களில் பரவலானது.
காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அக்காணொளியைப் பகிர, ஞாயிற்றுக்கிழமையன்று (மே 19) ராஜன் சிங் கைது செய்யப்பட்டார்.
அத்துடன், துணைத் தேர்தல் அதிகாரி பிரதீத் திரிபாதி அளித்த புகாரின் பேரில் ராஜன்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட, சம்பந்தப்பட்ட அதிகாரிகள்மீது உரிய நடவடிக்கை எடுக்க உ.பி. மாநிலத் தேர்தல் அதிகாரி நவ்தீப் ரின்வா உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அந்த வாக்குச்சாவடியிலிருந்த எல்லா அதிகாரிகளையும் பணியிடைநீக்கம் செய்யுமாறும் அவர்கள்மீது ஒழுங்குமுறை நடவடிக்கை எடுக்குமாறும் தேர்தல் குழு உத்தரவிட்டுள்ளது.
“தேர்தல் ஆணையமே, இதனைக் கண்டீர்களா? ஒருவரே எட்டு முறை வாக்களிக்கிறார். விழித்தெழ வேண்டிய நேரமிது,” என்று ‘எக்ஸ்’ ஊடகம் வழியாக காங்கிரஸ் கட்சி பதிவிட்டிருந்தது.
தொடர்புடைய செய்திகள்
சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவும் அக்காணொளியைப் பகிர்ந்து, நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தியிருந்தார்.