மும்பை: மும்பையில் நடைபெற்ற காவலர் எழுத்துத் தேர்வில் வசூல்ராஜா எம்பிபிஎஸ் பாணியில் மோசடி நடைபெற்றது அம்பலமாகி உள்ளது.
மோசடியில் ஈடுபட்ட இளையர் கைது செய்யப்பட்டு உள்ளார். மும்பை காவல்துறையில் வாகன ஓட்டுநர் பணிக்கான எழுத்துத் தேர்வு கடந்த சனிக்கிழமை (ஜனவரி 11) ஜோகேஷ்வரி வெஸ்ட் என்னும் பகுதியில் உள்ள ராய்காட் ராணுவப் பள்ளியில் நடைபெற்றது.
அந்தத் தேர்வை எழுதிய 22 வயது இளையர் தமது காதில் ஒரு சிறிய மாத்திரை அளவுள்ள ‘ப்ளூ டூத்’ சாதனத்தை வைத்து இருந்தார். வெளியில் இருந்து யாரோ ஒருவர் கேள்விக்கான விடைகளைச் சொல்லச் சொல்ல அவர் விடைத்தாளில் எழுதிக் கொண்டு இருந்தார்.
இருப்பினும், அவ்வப்போது ப்ளூ டூத் தொடர்பில் இடையூறு ஏற்பட்டது. அதனால் அவர் அடிக்கடி காதில் உள்ள அந்தச் சாதனத்தைத் தொட்டுக்கொண்டு இருந்ததைத் தேர்வுக் கண்காணிப்பாளர் கவனித்தார். ஒரு கட்டத்தில், கழிவறைக்குச் சென்று ப்ளூ டூத் தொடர்பைச் சரிசெய்ய முயன்றதையும் அவர் தெரிந்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, அந்த இளையரை தேர்வுக் கண்காணிப்பாளர் கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
விசாரணையில் அவர் பெயர் குஷ்னா தால்வி, 22, என்றும் மகாராஷ்டிராவின் ஜால்னா மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட குஷ்னாவிடம் இருந்து ப்ளூ டூத் சாதனமும் கைப்பேசியும் பறிமுதல் செய்யப்பட்டன. அவரிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், வெளியில் இருந்து அவருக்கு விடைகளைக் கூறியது யார் என்பது பற்றியும் விசாரணை நடைபெறுகிறது. 2004ஆம் ஆண்டு வெளியான வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில் இந்த மோசடி நடைபெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.