மின்தூக்கியில் கால் மாட்டிக்கொண்டதால் இரண்டரை மணி நேரம் தவித்த ஆடவர்

மின்தூக்கியில் கால் மாட்டிக்கொண்டதால் இரண்டரை மணி நேரம் தவித்த ஆடவர்

2 mins read
e4af9109-361b-4495-8fc2-c5ca875dc4f3
மின்தூக்கி இடைவெளியில் மாட்டிக்கொண்ட கால். - படம்: இந்திய ஊடகம்
multi-img1 of 2

கோல்கத்தா: மின்தூக்கிக்கும் தளத்திற்குமான இடைவெளியில் கால் சிக்கிக்கொண்டதால் ஆடவர் ஒருவர் இரண்டரை மணி நேரத்திற்கும் மேலாகத் தவித்த சம்பவம் இந்தியாவின் கோல்கத்தா நகரில் நிகழ்ந்தது.

சகாபுதீன் மொல்லா, 44, என்ற அந்த ஆடவர் புதன்கிழமை (மார்ச் 13) பிற்பகல் 1 மணியளவில் அலிப்பூர் கருவூலக் கட்டடத்திற்குச் சென்றார்.

அங்குள்ள மின்தூக்கியில் ஏறிய அவர் ஐந்தாம் மாடியில் இறங்க முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.

ஐந்தாம் மாடிலிருந்து சகாபுதீன் வெளியேற முயன்றபோது மின்தூக்கி சற்று கீழிறங்கியதாகக் காவல்துறை தெரிவித்தது.

இதனால் அவரது ஒரு கால் மட்டும் இடைவெளியில் சிக்கிக்கொண்டது.

நான்காவது, ஐந்தாவது மாடிகளுக்கு இடையே மின்தூக்கி நின்றுவிட்டது. அப்போது அதனுள் மேலும் பத்துப் பேர் இருந்தனர்.

இதனையடுத்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் பேரிடர் மேலாண்மைக் குழுவும் தீயணைப்புத் துறையும் உதவிக்கு அழைக்கப்பட்டன.

இரண்டு மணி நேரம் போராடியபின், மின்தூக்கியில் இருந்தவர்கள் நான்காம் மாடிக்குக் கொண்டுவரப்பட்டனர். அதன்பின் அரைமணி நேரம் போராடி இரும்புக் கதவை அறுத்து, சகாபுதீன் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்ட கிருஷ்ணகாந்த் தாஸ் என்ற இளையர் கூறுகையில், “தரைத்தளத்தில் மின்தூக்கிக் கதவு திறந்ததும் பலரும் ஏறினர். வழக்கமாக அது எல்லாத் தளத்திலும் நின்றுசெல்லும். அப்படி ஐந்தாம் மாடியில் மின்தூக்கி நின்றபோது சகாபுதீன் வெளியேற முயன்றார். ஆனால், மின்தூக்கி சடாரென சற்று கீழிறிங்க, அவரது கால் மாட்டிக்கொண்டது. முதலில் நாங்கள் பலமுறை கத்தியும் உதவி கிட்டவில்லை. அவசரகாலப் பொத்தானும் வேலை செய்யவில்லை. சகாபுதீன் காலை நாங்கள் பிடித்துக்கொண்டோம். இல்லாவிடில் அவரது கால் துண்டாகி இருந்திருக்கும்,” என்றார்.

அந்தப் பழைய மின்தூக்கி முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்று சிலர் குறைகூறினர்.

குறிப்புச் சொற்கள்