தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மது தராததால் மதுக்கடையைக் கொளுத்திய மது

1 mins read
eb428de4-1374-4bbb-a017-85878513057a
மாதிரிப்படம்: - பிக்சாபே

விசாகப்பட்டினம்: தனக்கு மதுபானம் தர மறுத்ததால் ஆடவர் ஒருவர் மதுக்கடையையே தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் இந்தியாவின் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் நிகழ்ந்தது.

இதில் வியப்பு என்னவெனில், அந்த ஆடவரின் பெயரும் மது என்பதுதான்!

தீபாவளி நாளான ஞாயிற்றுக்கிழமையன்று விசாகப்பட்டினத்தின் மதுர்வாடா பகுதியில் அமைந்துள்ள ஒரு மதுக்கடைக்குச் சென்றார் மது. ஆனால், கடை மூடும் நேரமாகிவிட்டதால் அவருக்கு மதுபானம் வழங்க ஊழியர்கள் மறுத்துவிட்டனர்.

இதனையடுத்து, அவர்களுக்குள் வாக்குவாதம் எழுந்தது. மது எச்சரிக்கப்பட்டதை அடுத்து, அவர் அங்கிருந்து அகன்றுவிட்டார்.

மாலையில் பெட்ரோல் கலனோடு அந்த மதுக்கடைக்குத் திரும்பிய மது, அதனை கடைக்கு உள்ளேயும் ஊழியர்கள் மீதும் ஊற்றி, உடனே தீ வைத்தார்.

கடைக்காரர்கள் பதறியடித்தபடி வெளியே ஓடிவிட்டனர். ஆனால், கடை தீப்பற்றி எரிந்தது.

இதனால், கடையிலிருந்த ஒன்றரை லட்ச ரூபாய்க்கும் அதிகமான பொருள்கள் எரிந்து சாம்பலாயின. கடையிலிருந்த கணினியும் அச்சு இயந்திரமும் சேதமடைந்தன.

இதனையடுத்து, காவல்துறையினர் மதுவைக் கைதுசெய்து, அவர்மீது இரண்டு சட்டப் பிரிவுகளின்கீழ் வழக்கு பதிந்தனர்.

குறிப்புச் சொற்கள்