தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

காட்டுப்பன்றி என நினைத்து ஆடவர் சுட்டுக்கொலை; ஒன்பது பேர் கைது

1 mins read
cd3bd4e7-1d56-4635-b68b-30b9ec7cae20
தங்களில் ஒருவரே தவறுதலாகச் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், அவரது உடலைப் புதருக்குள் போட்டுவிட்டு கிராமவாசிகள் ஓட்டம்பிடித்தனர். - மாதிரிப்படம்

மும்பை: வேட்டைக்குச் சென்றிருந்தபோது காட்டுப்பன்றி என நினைத்து ஆடவரைச் சுட்டுக்கொன்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

பால்கர் மாவட்டம், போர்ஷெட்டி எனும் சிற்றூர்வாசிகள் சிலர் ஒரு குழுவாகச் சேர்ந்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக ஜனவரி 28ஆம் தேதி அருகிலிருந்த காட்டுப்பகுதிக்குச் சென்றனர்.

“அக்குழுவினர் இரு பிரிவாகப் பிரிந்துசென்றனர். சிறிது நேரத்திற்குப் பிறகு, வேட்டைக்காரர்களில் ஒருவர் காட்டுப்பன்றி என நினைத்துச் சுட்டதில் அக்குழுவைச் சேர்ந்த இருவர்மீது குண்டு பாய்ந்தது. அவர்களில் ஒருவர் அவ்விடத்திலேயே மாண்டுபோனார்,” என்று காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் அபிஜித் தாராஷிவ்கர் கூறினார்.

மாண்டவர் 60 வயது ரமேஷ் வர்தா என அடையாளம் காணப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அக்குழுவினர், அதுபற்றிக் காவல்துறையிடம் தெரிவிக்காமல், அவரது உடலைப் புதருக்குள் போட்டுவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

இதனிடையே, கடந்த திங்கட்கிழமையன்று தம் கணவரைக் காணவில்லை என்று ரமேஷின் மனைவி காவல்துறையிடம் புகாரளித்தார்.

விசாரணையில் ஜனவரி 28ஆம் தேதியன்று போர்ஷெட்டிவாசிகள் வேட்டையாடச் சென்றதும் மறுநாள் அவர்களுடன் ரமேஷ் சேர்ந்துகொண்டதும் தெரியவந்தது.

அப்போது, உணவு சமைக்கும் இடத்திற்கு அவர் நடந்துசென்றார். காய்ந்த இலைகளை அவர் மிதித்தபோது எழுந்த சத்தத்தைக் கேட்டு, காட்டுப்பன்றிதான் என நினைத்து சாகர் நரேஷ் என்பவர் தவறுதலாக அவரைச் சுட்டுவிட்டார்.

நரேஷிடமும் மற்ற சந்தேகப் பேர்வழிகளிடமும் நடத்திய விசாரணையின் அடிப்படையில், புதன்கிழமையன்று (பிப்ரவரி 5) ரமேஷின் அழுகிய உடலைக் காவல்துறை மீட்டது.

இச்சம்பவம் தொடர்பில் ஒன்பது பேரைக் காவல்துறை கைதுசெய்துள்ளது.

குறிப்புச் சொற்கள்