வாரணாசி: சிகரெட் விற்க மறுத்த மளிகைக்கடைக்காரரை அடையாளம் தெரியாத சிலர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி மாவட்டத்தைச் சேர்ந்த பீர்நதிப்பூர் எனும் சிற்றூரில் நிகழ்ந்தது.
அவ்வூரைச் சேர்ந்த சாரதா யாதவ், 55, கடந்த வியாழக்கிழமை (செப்டம்பர் 12) இரவு தம்முடைய மளிகைக்கடைக்கு வெளியே படுத்திருந்தார்.
அப்போது, மோட்டார்சைக்கிளில் வந்த சிலர் அவரை எழுப்பி சிகரெட் தருமாறு கேட்டுள்ளனர்.
அதற்கு, கடையின் சாவி வீட்டிற்குள் உள்ளது என்றும் நள்ளிரவு நேரத்தில் கடையைத் திறக்க முடியாது என்றும் கூறி, யாதவ் மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மர்ம மனிதர்கள், அவரது தொண்டையைப் பிடித்து, அவரது கழுத்தில் சுட்டனர்.
வீட்டின் மாடியில் படுத்திருந்த யாதவின் மனைவி, துப்பாக்கிச் சத்தம் கேட்டு ஓடோடி வந்தார். ஆனால், அதற்குள் அந்த மர்ம மனிதர்கள் தப்பிவிட்டனர்.
ரத்த வெள்ளத்தில் கிடந்த யாதவை அவருடைய குடும்பத்தினர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர். ஆயினும், அவர் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்.
தொடர்புடைய செய்திகள்
அதனைத் தொடர்ந்து, ஊரார் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து அருகிலுள்ள ஊர்களிலிருந்தும் ஏராளமானோர் யாதவின் வீட்டிற்குமுன் திரண்டனர்.
இதனிடையே, குற்றவாளிகளை அடையாளம் கண்டு, கைதுசெய்யும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

