தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பார்வையற்ற பெண் பயணியை விமானத்திலேயே விட்டுச்சென்ற ஊழியர்கள்

1 mins read
c2e6f0e5-dc6d-439f-9756-cfd72d2d1ca1
விமானம் தரையிறங்கிய பின்னும் அந்தப் பார்வைற்ற பெண் கிட்டத்தட்ட 20 - 25 நிமிடங்கள் விமானத்திலேயே தனியாக இருக்க நேரிட்டது. - மாதிரிப் படம்: ஊடகம்

புதுடெல்லி: விமானம் தரையிறங்கியபின் பார்வையற்ற தன் தாயாரை விமானத்திலேயே விட்டுச்சென்றதாக ஆடவர் ஒருவர் சாடியுள்ளார்.

இச்சம்பவம் கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி டெல்லியிலிருந்து கோல்கத்தா சென்ற விஸ்தாரா விமானத்தில் நிகழ்ந்தது.

இதனால் மனக்குறைப்பட்டுக்கொண்ட ஆயுஷ் கெஜ்ரிவால் என்ற அந்த ஆடவர், அந்த அனுபவத்தைத் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார்.

“@விஸ்தாரா ஏர்லைன்ஸ், பார்வையற்ற என் தாயாரை எப்படி இப்படியோர் அபாயத்தில் சிக்க வைக்கலாம்? உங்களது கண்காணிப்பின், உதவியின்கீழ் விடப்பட்ட உடற்குறையுள்ள பயணிகளைக் கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லையா? அதிர்ச்சி அளிக்கிறது!” என்று அப்பதிவில் எழுதியுள்ள ஆயுஷ், மொத்த நிகழ்வையும் விவரித்துள்ளார்.

விமானம் தரையிறங்கியபின் கிட்டத்தட்ட 20 - 25 நிமிடங்கள் தன் தாயார் விமானத்திலேயே இருந்ததாக அவர் குறிப்பிட்டார். தன் தாயார் மட்டும் இறங்கியிருக்கவில்லை எனில், அடுத்ததாக அவர் அவ்விமானத்திலேயே அந்தமானுக்குச் சென்றிருக்கக்கூடும் என்றும் அவர் சொன்னார்.

இந்நிகழ்வு ‘மிகுந்த துயரமளிப்பதாகக்’ குறிப்பிட்ட அவர், தேவையான நேரத்தில் தேவையான உதவியை வழங்க இஸ்தாரா தவறிவிட்டதாகச் சாடினார்.

“விமானம் தரையிறங்கியதும், என் அம்மாவைத் தவிர மற்ற எல்லாப் பயணிகளும் விமானத்தைவிட்டு வெளியேறிவிட்டனர். நல்ல வேளையாக, விமானத் துப்புரவாளர் ஒருவர் என் அம்மாவின் கூக்குரலைக் கேட்டு, மற்றவர்களுக்கு விழிப்பூட்ட, அதன்பின் அவர் பாதுகாப்பாக விமானத்தைவிட்டு வெளியில் வந்தார்,” என்று திரு ஆயுஷ் விளக்கினார்.

இதனையடுத்து, நடந்த நிகழ்விற்காகத் திரு ஆயுஷிடம் விஸ்தாரா ஏர்லைன்ஸ் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்