பாட்னா: கைப்பேசியில் விளையாட தன் குடும்பத்தினர் அனுமதிக்கவில்லை என்பதால் ஆடவர் ஒரு சாவிக்கொத்தையும், இரு நகவெட்டிகளையும், ஒரு கத்தியையும் விழுங்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இந்தியாவின் பீகார் மாநிலம், மோத்திஹாரியில் நிகழ்ந்தது.
இணையம் வழியாகப் பலர் சேர்ந்து விளையாடும் ‘பேட்டில்கிரவுண்ட்ஸ் மொபைல் இந்தியா’ என்ற விளையாட்டை அவர் விளையாட அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, அந்த இரும்புப் பொருள்களையெல்லாம் அவர் விழுங்கினார். அப்படியும் சிறிது நேரத்திற்கு அவர் நலமாக இருந்தார்.
சில மணி நேரத்திற்குப் பிறகு அவரது உடல்நிலை மோசமடையத் தொடங்கியதும் மோத்திஹாரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஊடுகதிர்ச் சோதனையில் அவர் விழுங்கிய பொருள்கள் தெரிந்தன.
அதனைத் தொடர்ந்து, ஒன்றரை மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அவரது உடலில் இருந்த பொருள்களை அகற்றியதாக டாக்டர் அமித் குமார் என்பவரைச் சுட்டி, இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.
இப்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
“அவர் ஒரு சாவிக்கொத்து, ஒற்றைச் சாவி, இரண்டு நகவெட்டிகள், ஒரு கத்தி ஆகியவற்றை விழுங்கிவிட்டார். கைப்பேசியில் விளையாட விடாத ஆத்திரத்தில் அவர் அவற்றை விழுங்கினார். இப்போது, ஆபத்தான நிலையைக் கடந்து, நலமாக உள்ளது,” என்று டாக்டர் அமித் கூறினார்.

