புதுடெல்லி: ரயிலில் பயணம் செய்தபோது பாஜக சட்டமன்ற உறுப்பினருக்குத் தனது இருக்கையை விட்டுத்தராத ஆடவர்க்குச் சரமாரி அடி உதை விழுந்தது.
இந்த அதிர்ச்சி சம்பவம் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 19) டெல்லி - போபால் இடையில் இயக்கப்பட்ட வந்தே பாரத் ரயிலில் நிகழ்ந்தது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சி தொகுதி எம்எல்ஏவான ராஜீவ் சிங், தம் மனைவி, மகனுடன் அந்த ரயிலில் பயணம் செய்தார்.
அந்தக் குறிப்பிட்ட ரயில் பெட்டியின் பின்பகுதியில் ராஜீவிற்கும் முன்பகுதியில் அவருடைய மனைவி, மகனுக்கும் இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.
அவருடைய மனைவி, மகனுக்கு அடுத்த இருக்கையில் அந்த ஆடவர் அமர்ந்திருந்தார்.
அப்போது, ராஜீவ் தம் மனைவி, மகனுடன் சேர்ந்து அமர ஏதுவாக இருக்கையை மாற்றிக்கொள்ளும்படி கேட்டதற்கு அந்த ஆடவர் மறுத்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
இதனையடுத்து, ஜான்சி நிலையத்தில் ரயில் நின்றதும் ராஜீவின் ஆதரவாளர்களாகக் கூறப்பட்ட சிலர் அதில் ஏறி, அந்த ஆடவரை அடித்து உதைத்தனர். செருப்பைக் கொண்டும் அவர்கள் அந்த ஆடவரை அடித்தனர். இது தொடர்பான காணொளி இணையத்தில் பரவியது.
அடித்து உதைக்கப்பட்ட ஆடவரின் மூக்கிலிருந்து ரத்தம் ஒழுகியதும் அவரது ஆடைகளில் ரத்தம் கொட்டியிருந்ததும் தெரிந்தது.
தொடர்புடைய செய்திகள்
இருக்கைகளை மாற்றிக்கொள்வது தொடர்பில் வாக்குவாதம் எழுந்ததை ஜான்சி ரயில்வே காவல்துறை ஆணையர் விபுல் குமார் உறுதிசெய்தார்.
கண்காணிப்புப் படக்கருவியில் பதிவான காணொளியின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இதனிடையே, எம்எல்ஏ ராஜீவ் அளித்த புகாரை அடுத்து வழக்கு பதிந்துள்ளதாக ஜான்சி ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. சக பயணி ஒருவர் அத்துமீறி நடந்துகொண்டதாக ராஜீவ் அப்புகாரில் குறிப்பிட்டுள்ளார். அதனைத் தட்டிக்கேட்டதால் பின்னர் தம் குடும்பத்தினரிடமும் அந்த ஆடவர் முறைதவறி நடந்துகொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

