தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியத் தலைமை நீதிபதி மீது நீதிமன்றத்தில் காலணி வீசிய வழக்கறிஞர்

2 mins read
2f7bf815-6974-4936-824d-001cc47003d1
இந்தியத் தலைமை நீதிபதி பிஆர் கவாய். - படம்: பிடிஐ / இணையம்

புதுடெல்லி: இந்திய உச்ச நீதிமன்றத்தில் அந்நாட்டுத் தலைமை நீதிபதி மீது வழக்கறிஞர் ஒருவர் காலணியை எறிந்திருக்கிறார்.

இச்சம்பவம் திங்கட்கிழமை (அக்டோபர் 6) நிகழ்ந்தது. வீசப்பட்ட காலணி நீதிபதியின் கூடத்தைச் சென்றடையவில்லை.

காலணியை எறிந்த வழக்கறிஞர் உடனடியாகத் தடுத்து வைக்கப்பட்டார். இச்செயல் தன்னைப் பாதிக்கவில்லை என்றார் இந்தியத் தலைமை நீதிபதி பிஆர் கவாய்.

“இத்தகைய செயல்களால் பாதிக்கப்படுபவர் நானல்ல,” என்று கூறிவிட்டு திரு கவாய் நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து நடத்தினார்.

நீதிமன்ற விசாரணை நடந்துகொண்டிருந்தபோது அந்த முதியவர் ‘சனாதன தர்மம் இழிவுபடுத்தப்படுவதை இந்தியா சகித்துக்கொள்ளாது’ என்று சொல்லி முழக்கமிட்டதாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.

காலணியை எறிந்தவரிடம், உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள், செயல்பாட்டு உதவியாளர்கள் ஆகியோருக்கு மட்டும் வழங்கப்படும் தொடர்பு அட்டை இருந்ததாக அறியப்படுகிறது என்று என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த அட்டையில் கி‌ஷோர் ராக்கே‌ஷ் என்ற பெயர் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரின் செயலுக்குப் பின்னால் உள்ள நோக்கம் இன்னும் தெரியவில்லை. சம்பவம் நிகழ்ந்தபோது தலைமை நீதிபதி எந்த சலனமுமின்றி அமைதியாக இருந்தார் என்று அங்கிருந்த வழக்கறிஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

“இதுபோன்ற செயலால் கவனத்தை இழக்காதீர். நாங்கள் கவனத்தை இழக்கவில்லை. இவை என்னைப் பாதிப்பதில்லை,” என்று அவர் நீதிமன்றத்தில் இருந்த வழக்கறிஞர்களிடம் கூறியதாக இந்துஸ்தான் டைம்ஸ் ஊடகம் தெரிவித்தது.

இந்திய உச்ச நீதிமன்றத்தின் தற்காப்புப் பிரிவு இச்சம்பவம் குறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

திரு கவாய், அண்மையில் இந்து சமய நம்பிக்கையைப் புண்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அதற்குப் பின் சில நாள்கள் கழித்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

தங்களின் சமய நம்பிக்கைகளை திரு கவாய் இழிவுபடுத்தியதாக பல இந்து சமய அமைப்புகள் சமூக ஊடகங்களில் பதிவிட்டன. பின்னர் கடிதம் ஒன்றின் முலம் அவர், தாம் எல்லா சமயங்களையும் மதிப்பதாகக் கூறியிருந்தார்.

காலணி வீச்சுக்கு ஸ்டாலின் கண்டனம்

இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கவாய்மீது காலணி வீசப்பட்டதற்குத் தமிழக முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இன்று உச்ச நீதிமன்றத்துக்குள் தலைமை நீதிபதி மீதான தாக்குதல் நடவடிக்கை, நமது மக்களாட்சியின் மிக உயர்ந்த துறையாகக் கருதப்படும் நீதித்துறை மீதான தாக்குதலாகும். இது கடுமையான கண்டனத்துக்குரியது.

“மாண்புமிகு தலைமை நீதிபதி கருணை, அமைதி, பெருந்தன்மையுடன் பதிலளித்த விதம் நீதிமன்றத்தின் வலிமையைக் காட்டுகிறது. ஆனால் அதற்காக நாம் இந்தச் சம்பவத்தை எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

“நீதித்துறையைப் பாதுகாக்கும் முதிர்ச்சியான நடத்தையை வெளிப்படுத்தும் கலாசாரத்தை நாம் உருவாக்க வேண்டும்,” என ஸ்டாலின் கூறியுள்ளார்.

காங்கிரஸ் உட்பட பல்வேறு எதிர்க்கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்