இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் அத்துமீறி நுழைந்த ஆடவர்

1 mins read
61a4c9b3-3593-4641-b3ac-229f4e920990
சுவரைத் தாண்டி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபரை பாதுகாப்பு பணியில் இருந்த பாதுகாவலர்கள் கைது செய்தனர். - படம்: தினத்தந்தி

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 22) காலை 6.30 மணிக்கு (சிங்கப்பூரில் காலை 9 மணி) அடையாளம் தெரியாத நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

அவர் மரத்தின் வழியாக ஏறி நாடாளுமன்ற வளாகத்திற்குள் குதித்ததாகக் கூறப்படுகிறது.

பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த மர்ம நபரை மடக்கிப் பிடித்ததாகவும் தற்போது அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைந்த ஒரு நாளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

முன்னதாக, 2023ஆம் ஆண்டு இதேபோன்ற பாதுகாப்பு மீறல் சம்பவம் நடந்தது நினைவுகூரத்தக்கது. சாகர் சர்மா, மனோரஞ்சன் என்ற ஆடவர் இருவர் பொதுமக்களுக்கான காட்சிக்கூடத்திலிருந்து இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை அறைக்குள் நுழைந்தனர். அவர்களில் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமர்ந்திருந்த மேசைகள் மீது குதித்து மஞ்சள் நிறப் புகைக் குப்பியை வீசினார். இந்தச் சம்பவங்கள் நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் மீது கடுமையான கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை நடந்த பாதுகாப்பு அத்துமீறல் தொடர்பாக முழு அளவிலான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராப் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டு, கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகளில் உள்ள குறைபாடுகள் கண்டறியப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்