புதுடெல்லி: இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்த வயதான பழங்குடியின ஆடவர் ஒருவர், தனது சகோதரியின் எலும்புக் கூட்டுடன் வங்கிக்குச் சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
ஜிது முண்டா, 55, என்ற அந்த ஆடவர் அவரது இறந்த சகோதரியின் வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை எடுப்பதற்காக வங்கியை அணுகியுள்ளார்.
ஆடவரின் சகோதரியான கலரா முண்டா இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்தார். அவரின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.20,000ஐ எடுக்க ஜிது முயற்சி செய்தார்.
வங்கி அதிகாரிகள், வங்கிக் கணக்கு உள்ள நபரையோ அவர் உயிரிழந்தது தொடர்பான ஆவணங்களையோ சமர்ப்பிக்குமாறு ஜிதுவிடம் கேட்டுக்கொண்டனர்.
அது குறித்த புரிதல் இல்லாத அந்த நபர், கல்லறையைத் தோண்டி உயிரிழந்த தனது சகோதரியின் எலும்புக் கூட்டை வங்கிக்கே எடுத்துச் சென்றார். அச்சம்பவம் திங்கட்கிழமை (ஏப்ரல் 27) நடந்தது.
“நான் பலமுறை வங்கிக்கு அலைந்துத் திரிந்தேன். சகோதரி இறந்துவிட்டார் என்று அதிகாரிகளிடம் கூறினேன். அவர்கள் பிடிவாதமாக ஆதாரம், ஆவணம் கேட்டனர். அதனால் எலும்புக் கூட்டை எடுத்துச் சென்றேன்,” என்று ஜிது முண்டா தெரிவித்தார்.
“ஜிது கல்வியறிவு பெறாத பழங்குடியினரில் ஒருவர். இறந்த ஒருவரின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான நடைமுறையை அவருக்குப் புரியவைப்பதில் வங்கி அதிகாரிகள் தவறிவிட்டனர்,” என்று காவல்துறை தெரிவித்தது.
அச்சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையினர் தலையிட்டு, அந்தப் பழங்குடியினரின் மறைந்த சகோதரியின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்குத் தாங்களே ஏற்பாடு செய்து கொடுக்கப்போவதாக அவருக்கு உறுதியளித்தனர். அதன் பின்னர், ஜிதுவின் சகோதரியின் எலும்புக் கூட்டு எச்சங்கள் காவல்துறையினரின் மேற்பார்வையின்கீழ் அடக்கம் செய்யப்பட்டன.

