ஆந்திரப் பிரதேசம்: மதுபானத்திற்கு அடிமையானவர்கள் அளவுக்கதிகமாகக் குடித்துவிட்டுப் பொது இடங்களில் அட்டகாசம் செய்வது பற்றிய பல தகவல்களைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.
அவர்களில் சிலருக்கு போதை தெளிந்த பிறகு, மது மயக்கத்தில் தாங்கள் என்ன செய்தோம் என்றுகூடத் தெரியாது.
அப்படி ஒரு சம்பவம் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மான்யம் வட்டாரத்தில் அண்மையில் நிகழ்ந்துள்ளது. அங்குள்ள எம்.சிங்கிபுரம் என்ற கிராமத்தில் மது அருந்திய ஆடவர் மின்கம்பத்தில் ஏறிப் படுத்துறங்கினார்.
அந்த ஆடவர் மின்கம்பத்தில் ஏறுவதைப் பார்த்த பொதுமக்கள் அவரை நெருங்குவதற்குள், அவர் கம்பத்தின் உச்சியில் ஏறிவிட்டார்.
மின்கம்பிகளை அவர் தொட்டால் உயிருக்கு ஆபத்து நேரும் என்ற அச்சத்தில் அந்தப் பகுதியில் சிறிது நேரத்திற்கு மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது.
எதையும் கண்டுகொள்ளாமல் அந்தரத்தில் மின்கம்பிகளின்மேல் படுத்த அவர் உறக்கத்தில் ஆழ்ந்தார். கீழே கூடி நின்றவர்கள் உரக்க அழைத்தது அவர் காதுகளில் விழவேயில்லை.
நீண்ட நேரத்துக்குப் பிறகு ஆடவரைப் பொதுமக்கள் கீழே இறக்கியதாகக் கூறப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவிவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

