பிச்சைக்காரரைக் கொன்று நாடகமாடியவர் 17 ஆண்டுகளுக்குப்பின் சிக்கினார்

பிச்சைக்காரரைக் கொன்று நாடகமாடியவர் 17 ஆண்டுகளுக்குப்பின் சிக்கினார்

1 mins read
82ca7071-ba21-4e3f-95aa-e61e8f175719
மாதிரிப்படம்: - பிக்சாபே

ஆக்ரா: பிச்சைக்காரர் மரணம் சம்பந்தப்பட்ட காப்புறுதி மோசடி வழக்கில் 17 ஆண்டுகளுக்குப்பின் உண்மை வெளிப்பட்டுள்ளது.

கடந்த 2006ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதியன்று, இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், ஆக்ரா கோட்டை அருகே கார் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் அதிலிருந்த ஓட்டுநர் மாண்டுபோனார்.

விஜய்பால் சிங் என்பவரின் மகன் அனில் சிங்கின் பெயரில் அந்தக் கார் பதிவுசெய்யப்பட்டிருந்தது. விஜய்பாலின் குடும்ப நண்பரான ராம்வீர் சிங், 62, அனிலின் உடலை அடையாளம் காட்டி, அவரது மரணத்தை உறுதிப்படுத்தினார்.

ஆயினும், அவ்விபத்து குறித்து விசாரித்த காவல்துறை, காப்புறுதிப் பணத்தைச் சுருட்டுவதற்காக ஒரு நாடகம் அரங்கேற்றப்பட்டதைக் கண்டுபிடித்தது.

பிச்சைக்காரர் ஒருவருக்குத் தன்னுடைய உடைகளை அணிவித்த ராம்வீர் சிங், அவரைக் காரில் ஏற்றி, உயிரோடு கொளுத்தியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இவ்வழக்கில் முக்கியக் குற்றவாளியான, தீப்பிடித்து மாண்டதாகச் சொல்லப்பட்ட அனிலை அகமதாபாத் காவல்துறை கைதுசெய்து, உண்மையை அம்பலப்படுத்தியது.

ரூ.60 லட்சத்திற்குக் (S$97,600) காப்புறுதி வைத்திருந்த அனில், தானே இறந்துவிட்டதாக நாடகமாடி, தன்னுடைய இறப்புச் சான்றிதழைப் பெற்று, அந்தக் காப்புறுதிப் பணத்தையும் பெற்றார்.

தலைமறைவாக இருந்த ராம்வீர் சிங்கும் உத்தரப் பிரதேசத்தின் கௌதம புத்த நகரில் கைதுசெய்யப்பட்டார்.

குறிப்புச் சொற்கள்