புவனேஸ்வர்: மெல்லும் புகையிலை (குட்கா) வாங்குவதற்குப் பத்து ரூபாய் (S$0.15) தராததால் ஆடவர் ஒருவர் தன் தந்தையின் தலையைத் துண்டித்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மயூர்பஞ் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த 40 வயது ஆடவர், தன் 70 வயதுத் தந்தையைக் கூரிய ஆயுதத்தால் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.
பின்னர் தன் தந்தையின் தலையுடன் அவர் அருகிலிருந்த காவல் நிலையத்திற்குச் சென்றார். அதனைக் கண்ட உள்ளூர்வாசிகளும் காவல்துறையினரும் பேரதிர்ச்சி அடைந்தனர்.
பைதர் சிங் என்ற அம்முதியவர் தன் மகனுக்குப் பணம் தர மறுத்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால், ஆத்திரமடைந்த அவருடைய மகன், தன் தாயின் கண்முன்னாலேயே தன் தந்தையைக் கொலைசெய்ததாகக் காவல்துறை உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தன் மகனின் கொடூரச் செயலைக் கண்ட அப்பெண், அலறியடித்தபடி அங்கிருந்து தப்பியோடினார்.
சம்பவ இடத்திற்கு யாரும் செல்ல முடியாதபடி தடுப்புகளைப் போட்டுள்ள காவல்துறை, தடயவியல் துறையின் துணையுடன் விசாரித்து வருகிறது.
தந்தையைக் கொலைசெய்த ஆடவர் காவல்துறைத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.