ஹெலிகாப்டர் கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்த ஆடவர்

ஹெலிகாப்டர் கேட்டு ஆட்சியரிடம் மனு அளித்த ஆடவர்

2 mins read
2d37fd1b-2da7-4ce6-b102-944367f35216
ஜோர்புரா கிராமத்தில் இரவு நேர குறை தீர்க்கும் முகாமை நடத்திய பார்மர் மாவட்ட ஆட்சியர் தினா தபியிடம் (வலது), ஹெலிகாப்டர் கேட்டு மனு அளித்த மங்கி லால்.  - படங்கள்: ஊடகம்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானைச் சேர்ந்த ஆடவர் ஒருவர், அங்குள்ள பார்மர் மாவட்ட ஆட்சியரிடம் ஹெலிகாப்டர் கேட்டு மனு அளித்திருந்தார். ஆடவரின் செயலால் ஆட்சியரும் அதிகாரிகளும் ஏன் இதுபோல் கேட்கிறார் என்று வியப்படைந்தனர்.

பொதுவாக மாவட்ட ஆட்சியர்களின் குறை தீர்க்கும் முகாம்களுக்கு வருபவர்கள் வீட்டுமனை பட்டா, வேலைவாய்ப்பு, ஓய்வூதியம், மின் இணைப்பு போன்றவற்றை கேட்டுத்தான் மனு அளிப்பார்கள்.

ஆனால், பார்மர் மாவட்ட ஆட்சியர் தினா தபியிடம், ஜோர்புரா கிராமத்தில் வசிக்கும் மங்கி லால் என்பவர் மனு ஒன்றைக் கொடுத்தார்.

அதில், ‘எனது வீட்டுக்குச் செல்லும் பாதையைச் சிலர் ஆக்கிரமித்து அதில் கடந்த சில நாள்களாக விவசாயம் செய்து வருகின்றனர்.

இதனால் பாதை அடைக்கப்பட்டு, வீட்டுக்கு எப்படிச் செல்வது என தெரியாமல் உள்ளேன். எனவே நான் வீட்டுக்குச் சென்று வர ஹெலிகாப்டர் ஒன்றை வழங்கவேண்டும்’ என குறிப்பிட்டு இருந்தார்.

இதைப்பார்த்த ஆட்சியருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. உடனடியாக வட்டாட்சியர் பத்ரிநாராயணனை அழைத்து, இந்த மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அவர் உத்தரவிட்டார்.

அத்துடன், மங்கி லால் வீட்டுக்குச் சென்று ஆய்வு செய்த வட்டாட்சியர், ஆக்கிரமிப்பாளர்களிடம் மூன்று நாள்களுக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார். இதில் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மங்கி லாலின் விண்ணப்பம் அதிகாரிகளுக்கு வினோதமான ஒன்றாகத் தெரிந்தாலும், தனது பிரச்சினை தீர்ந்ததை நினைத்து அவர் நிம்மதி அடைந்தார்.

குறிப்புச் சொற்கள்