சண்டிகர்: முன்னாள் பஞ்சாப் மாநிலத் துணை முதல்வரான சுக்பீர் சிங் பாதல் மீது துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதல் நடத்திய நபர் கடந்த செவ்வாய்க்கிழமையன்றும் (டிசம்பர் 3) சீக்கிய பொற்கோயிலில் காணப்பட்டார் என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுநாள்தான் நரேன் சிங் செளரா எனும் அந்த ஆடவர், திரு பாதல் மீது கொலை முயற்சி மேற்கொண்டார்.
புதன்கிழமையன்று (டிசம்பர் 4) பொற்கோயிலின் முக்கியப் பகுதியில் திரு பாதல் வழிபாட்டுச் சடங்கில் ஈடுபட்டபோது அருகிலிருந்து சௌரா துப்பாக்கிச் சூடு நடத்தினார்..
சாதாரண ஆடைகளில் இருந்த காவல்துறை அதிகாரிகள் செளராவைக் கட்டுப்படுத்தியதால் திரு பாதல்மீது அவர் வைத்த குறி தப்பியது.
முன்னாள் காலிஸ்தானிய பயங்கரவாதி என்று தெரிவிக்கப்பட்டுள்ள செளராவை காவல்துறையினர் ஏற்கெனவே கண்காணித்து வந்ததாக என்டிடிவி போன்ற ஊடகங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, ஷிரோமனி அகாலி தால் (SAD) கட்சித் தலைவரான திரு பாதல், வியாழக்கிழமையன்று (டிசம்பர் 5) பஞ்சாபின் ரூப்நகர் மாவட்டத்தில் இருக்கும் தக்த் கேஸ்கர் சாஹிப்பில் (Takht Kesgarh Sahib) வழிபாட்டுச் சடங்கில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.