திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்ற ஆடவர், கார் தீப்பிடித்ததில் பலி

2 mins read
babdfee6-b24a-49c9-b031-ebbbe3aaf4bc
கார் தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்த அனில். - படம்: ஊடகம்

புதுடெல்லி: டெல்லியில் சனிக்கிழமை இரவு தனது திருமண அழைப்பிதழை விநியோகிக்கச் சென்ற ஆடவர் ஒருவர், அவர் பயணம் செய்த கார் தீப்பிடித்ததில் உயிரிழந்தார். காஜிபூரில் உள்ள பாபா பேங்க்வெட் ஹால் அருகே இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

காருக்குள் இருந்தபடியே அவர் தீயில் எரிந்து இறந்ததாக காவலர்கள் தெரிவித்தனர்.

கார் முற்றிலும் எரிந்திருப்பதையும் குறிப்பாக ஓட்டுநரின் இருக்கை பகுதி மோசமாகப் பாதிக்கப்பட்டிருப்பதையும் புகைப்படங்கள் காட்டுகின்றன.

கிரேட்டர் நொய்டாவில் உள்ள நவாடாவில் வசிக்கும் அனில் என்ற ஆடவருக்கு அன்பர் தினமான பிப்ரவரி 14ஆம் தேதியன்று திருமணம் நடைபெற இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

“அவர் மதியம் திருமண அழைப்பிதழ்களை விநியோகிக்க வெளியே சென்றார். மாலை வரை அவர் வீடு திரும்பாததால், நாங்கள் அவரை கைப்பேசியில் அழைத்தோம். ஆனால், அவரது கைப்பேசி அணைக்கப்பட்டிருந்தது. இரவு 11:30 மணியளவில், காவலர்கள் எங்களை அழைத்து அனில் மருத்துவமனையில் இருப்பதாகக் கூறினர்,” என்று இறந்துபோனவரின் மூத்த சகோதரர் சுமித் கூறினார்.

அனிலின் மைத்துனர் யோகேஷ் கூறுகையில், “நானும் அனிலும் ஒன்றாக வேலை செய்து வந்தோம்.

“பிப்ரவரி 14ஆம் தேதி என் சகோதரிக்கும் அனிலுக்கும் திருமணம் நடைபெற இருந்தது. நேற்று இரவுதான் அவர் இறந்த தகவல் எங்களுக்குத் தெரிந்தது. கார் எப்படி தீப்பிடித்தது என்று எங்களுக்கு இன்னும் தெரியவில்லை,” என்று கூறினார்.

தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

உயிரிழந்தவரின் உடல், உடல் கூறாய்வுப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்