திருவனந்தபுரம்: கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் எனும் ஆடவர் திங்கட்கிழமை (மார்ச் 3) தனது மனைவியைச் சுட்டுக் கொன்றுவிட்டுத் தானும் உயிரை மாய்த்துக்கொண்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
ஆடவருக்கு வயது 52. அவரது மனைவியின் பெயர் சங்கீதா. அவர்களுக்கு அமீஷா, அக்ஷரா எனும் இரு மகள்கள் இருக்கின்றனர்.
கிருஷ்ணகுமாருக்குக் கேரளாவின் வண்டழி எனும் ஊரில் சொந்த வீடு உள்ளது.
சங்கீதா கோயம்புத்தூரில் தனியார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியதாகவும் திங்கட்கிழமை காலை வண்டழியிலிருந்து காரில் கிளம்பிச் சென்ற கிருஷ்ணகுமார் மனைவியைச் சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரிகிறது.
அதையடுத்து மனைவியைச் சுட்டுக் கொன்றார் கிருஷ்ணகுமார். பின்னர் கேரளாவிலுள்ள வீட்டுக்குத் திரும்பிய அவர், தன் தந்தையின் கண்முன்னே தன்னைத் தானே சுட்டுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
கோயம்புத்தூரில் துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்குத் தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் ரத்த வெள்ளத்தில் காணப்பட்ட சங்கீதாவின் உடலைக் கண்டதாகக் கூறப்படுகிறது.
கிருஷ்ணகுமாரும் சங்கீதாவும் மணவிலக்குப் பெறுவது குறித்துக் கலந்துபேசியதாகத் தெரிகிறது.