தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய அமைச்சர்களுக்குக் கட்டாய கொவிட்-19 பரிசோதனை

2 mins read
7072811e-ebd2-4122-acca-cd089c3b4a07
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கவரும் அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கு கொவிட்-19 பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவில் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை 7,000ஐத் தாண்டிவிட்டது.

இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்குமுன் அமைச்சர்கள் அனைவரும் கட்டாயம் ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை (ஜூன் 11) மாலை பிரதமரைச் சந்திக்கவிருக்கும் டெல்லி முதல்வர், ஏழு எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 70 பேர் கொவிட்-19 பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 306 பேரை கொவிட்-19 தொற்றியுள்ளதாகவும் ஆறு உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாகவும் இந்தியச் சுகாதார அமைச்சின் அதிகாரத்துவ அறிக்கை தெரிவிக்கிறது.

கேரளாவில் மூவரும், கர்நாடகாவில் இருவரும், மகாராஷ்டிராவில் ஒருவரும் கொரோனா தொற்றால் மாண்டுவிட்டனர்.

ஆக அதிகமாக, கேரளாவில் ஒரே நாளில் 170 பேர் கொவிட்-19 தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். அங்குத் தற்போது 2,000க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் மேலும் 114 பேரை கொவிட்-19 தொற்றியுள்ள நிலையில், அங்கு பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 1,223ஆக உயர்ந்திருக்கிறது. கர்நாடகாவில் புதிதாக 100 பேரை கொரோனா தொற்றியுள்ளது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் அதிகரித்துவரும் நிலையில், அதனை எதிர்கொள்ள மருத்துவமனைகள் தயார்நிலையில் உள்ளனவா என்பதை உறுதிசெய்ய மத்திய அரசு நாடு முழுவதும் ஒத்திகை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், உயிர்வாயு, தனிமைப்படுத்துவதற்கான படுக்கைகள், செயற்கைச் சுவாசக் கருவிகள், இன்றியமையாத மருந்துகள் போன்றவை போதிய அளவில் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

அதே நேரத்தில், பெரும்பாலானோருக்கு இலேசான அளவிலேயே தொற்று கண்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்