மாதவிடாய்க் கட்டாய விடுப்பு பெண்களைப் பாதிக்கும்: உச்ச நீதிமன்றம்

மாதவிடாய்க் கட்டாய விடுப்பு பெண்களைப் பாதிக்கும்: உச்ச நீதிமன்றம்

1 mins read
7af848b7-40f6-4c70-8663-4db85ece027a
உச்ச நீதிமன்றம். - கோப்புப் படம்: தினத்தந்தி

புதுடெல்லி: பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

பணிபுரியும் பெண்களுக்கு நிறுவனங்களில் மாதவிடாய் காலத்தில் ஊதியத்துடன் கூடிய கட்டாய விடுப்பு அளிக்கச் சட்டம் இயற்றும்படி மாநிலங்களுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் ஷைலேந்திர மணி திரிபாதி என்பவர் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு வெள்ளிக்கிழமை (மார்ச் 13), தலைமை நீதிபதி சூர்ய காந்த் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது.

விசாரணையின்போது நீதிபதிகள், “பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் ஊதியத்துடன் கட்டாய விடுப்பு என்று சட்டம் கொண்டுவந்தால் அது பெண்களின் வாழ்க்கையைப் பாதிக்கும். ஊதியத்துடன் விடுப்பு என்றால் நிறுவன உரிமையாளர்கள், பெண்களை வேலைக்கு அமர்த்த மாட்டார்கள். பெண்களின் வாய்ப்புகள் பறிபோகும்.

“அது பெண்களிடையே உளவியல்ரீதியாகத் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆண்களைவிடப் பெண்கள் தாழ்வானர்கள் என்ற பிம்பத்தை உருவாக்கும்.

“விழிப்புணர்வை ஏற்படுத்துவது வேறு, கட்டாயமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருவது வேறு. சில நிறுவனங்கள் தாமாக முன்வந்து பெண்களுக்கு மாதவிடாய் விடுப்பு அளிக்கின்றன, அது வரவேற்கத்தக்கது. ஆனால், அனைத்து நிறுவனங்களுக்கும் கட்டாயமாக்கினால் அது பணியிடங்களில் பெண்களின் பங்கைக் குறைக்கும். அரசியலமைப்புரீதியாகப் பெண்களுக்கு உரிமைகள் உள்ளன. ஆனால், சந்தை நிலவரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

“இதுவரை இதுதொடர்பாக எந்தப் பெண்ணும் நீதிமன்றத்தை அணுகவில்லை,” என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

குறிப்புச் சொற்கள்