மாம்பழச் சின்னம் எங்களுக்குத்தான்: அன்புமணி மகிழ்ச்சி

2 mins read
a744585c-6026-4560-bcda-ea936ffbc65e
அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணியில் கட்சி உறுப்பினர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சிக்கு (பாமக) மாம்பழச் சின்னத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் ஒதுக்கியிருப்பதாக அதன் தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியிருக்கிறார். அந்தச் சின்னம் தங்கள் பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார். பாமக நிறுவனர் எஸ் ராமதாசின் பிரிவும் மாம்பழச் சின்னத்தை ஒதுக்குமாறு முன்னர் கோரியிருந்தது.

அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான களப்பணியில் கட்சி உறுப்பினர்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினார். சென்னையில் புதன்கிழமை (நவம்பர் 12) நடைபெற்ற கட்சிக் கூட்டத்தில் அவர் பேசினார். கட்சி வேட்பாளர்களுக்கான படிவங்களில் தாமே கையெழுத்திடப்போவதாக டாக்டர் அன்புமணி தெரிவித்தார்.

“கூட்டணி பற்றிக் கட்சியினர் கவலைப்படவேண்டியதில்லை. மூத்த உறுப்பினர்களுடன் பேசிய பிறகு, நமக்கான சிறந்த கூட்டணி உருவாக்கப்படும்,” என்றார் அவர். கட்சி நிறுவனர் ராமதாசைச் சிலர் தவறாய் வழிநடத்துவதாக அவர் சொன்னார். கட்சிக்கும் டாக்டர் ராமதாசுக்கும் உண்மையாய் உழைத்ததாக அவர் குறிப்பிட்டார். இனியும் அது தொடரும் என்றார் டாக்டர் அன்புமணி.

தேர்தல் பிரசாரங்களில் பேசுவதற்கு 200 இளம் பேச்சாளர்களைக் கட்சி உறுப்பினர்கள் உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் அவர் சொன்னார். கட்சி நிர்வாகிகள் இன்னும் 5 மாதத்தில் அமைச்சர்களாகப் போகின்றனர் என்றும் டாக்டர் அன்புமணி நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிலையில் டாக்டர் ராமதாஸ், சனிக்கிழமையிலிருந்து (நவம்பர் 15) புதன்கிழமை (நவம்பர் 19) வரை, கட்சிக் கூட்டங்களை நடத்தப்போவதாகக் கூறியிருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்