இம்பால்: இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இனக் கலவரம் தொடங்கி கிட்டத்தட்ட ஈராண்டுகள் கழித்து, அம்மாநில முதல்வர் என்.பீரேன் சிங் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 9) பதவி விலகினார்.
திரு சிங் தமது பதவி விலகல் கடிதத்தை ஞாயிற்றுக்கிழமை மாலை மணிப்பூர் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் வழங்கினார்.
காலை டெல்லிக்குச் சென்ற அவர், அங்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவையும் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தார்.
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட தமது அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்து வருவதாக திரு சிங் கூறிய அடுத்த நாளே அவரது பதவி விலகல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2023 மே மாதம் மணிப்பூரில் இனக் கலவரம் மூண்டதைத் தொடர்ந்து, 250க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன், ஆயிரக்கணக்கானோர் வீடுகளையும் இழந்து பரிதவிக்கின்றனர்.
மணிப்பூரில் வன்முறை தொடர்ந்ததற்காக 2024 டிசம்பர் 31ஆம் தேதி திரு சிங் மன்னிப்பு கோரியிருந்தார்.