இம்பால்: மணிப்பூரின் உக்ருல் நகரில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் நடந்துவந்த வேளையில், காவல் நிலையத்திற்குள் சிலர் புகுந்து அங்கிருந்த ஆயுதங்களைச் சூறையாடினர்.
தற்போது இச்சம்பவம் குறித்து விசாரணை நடந்துவருவதால், அபகரிக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை குறித்தோ அவை எவ்வகையான ஆயுதங்கள் என்பது குறித்தோ உறுதியான தகவல்கள் ஏதுமில்லை.
முன்னதாக, செப்டம்பர் 2ஆம் தேதி ‘தூய்மை இந்தியா இயக்கம்’ தொடர்பாக நிலத் தகராற்றில் சிக்கியுள்ள ஓர் இடத்தைச் சுத்தம் செய்வதில் இரண்டு கும்பல்களுக்கிடையே துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்ந்தது. அதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமுற்றனர்.
இந்த வன்முறைக்கு இடையே, காவல் நிலையமும் தாக்குதலுக்கு உள்ளானது.
“உக்ருல் நகரில் வன்முறை மூண்ட பிறகு, பெரும்பாலும் இளையர்களைக் கொண்ட கும்பல் ஒன்று வீனோ பஸாரில் உள்ள காவல் நிலையத்திற்குள் புகுந்து அரசாங்க ஆயுதங்களோடு தப்பித்துவிட்டது,” என்றார் அதிகாரி ஒருவர்.
இந்நிலையில், நாகா சமூகத்தைச் சேர்ந்த இரண்டு கும்பல்களுக்கு இடையே சண்டை மூண்டதை அடுத்து கட்டுப்பாட்டு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு கைப்பேசி இணையச் சேவை தடைசெய்யப்பட்டது.